தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 6-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திரசிங் தோனி, முதல் இந்திய வீரராக 600-வது கேட்ச் பிடித்து அசத்தினார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கேப்டன் விராட் கோலி ஒருபுறம் சதங்களாக விளாசி சாதனைகளை படைத்தார். தோனி பேட்டிங்கில் அசத்தவில்லை என்றாலும், விக்கெட் கீப்பிங்கில் புதிய சாதனைகளை எட்டியுள்ளார்.
இதில் முக்கியமானது, நேற்றைய போட்டியில் ஆம்லா தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனியின் 600-வது கேட்ச். இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி, 600 கேட்சுகள், 174 ஸ்டெம்பிங்குகள் என 774 விக்கெட்கள் வீழ்வதற்கு காரணமாக இருந்துள்ளார்.
தோனி 90 டெஸ்ட் போட்டிகளில் 256 கேட்சுகளும், 318 ஒருநாள் போட்டிகளில் 296 கேட்சுகளும், 86 டி20 போட்டிகளில் 47 கேட்சுகளும் பிடித்துள்ளார். அதிக கேட்சுகள் பிடித்தவர் பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் மார்க் பவுச்சர் (952 கேட்ச்கள்), ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் (813 கேட்ச்) முதல் இரண்டு இரண்டங்களில் உள்ளனர். தற்போது, தோனி மூன்றாவது வீரராக 600 கேட்சுகள் பிடித்தவர் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். 3-வது ஒருநாள் போட்டியில், 50 ஓவர் போட்டிகள் 400 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமான முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமை பெற்றார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தோனி இன்னும் 33 ரன்கள் எடுத்தால் 10 ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 12-வது வீரராக இடம்பிடிப்பார். இந்திய அளவில் சச்சின், கங்குலி, டிராவிட் ஆகியோருக்கு அடுத்தபடியாக இந்த மைல்கல்லை எட்டுவார். ஆனால், நேற்றைய போட்டி உட்பட இந்தத் தொடரில் இரண்டு முறை தோனிக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. இனி அடுத்த ஒருநாள் தொடரில் தோனி இந்தச் சாதனையை நிச்சயம் படைப்பார்.