‘தோனியை 7ஆம் இடத்தில் இறக்கியதற்கு என்ன காரணம்?’ - சஞ்சய் பங்கர்

‘தோனியை 7ஆம் இடத்தில் இறக்கியதற்கு என்ன காரணம்?’ - சஞ்சய் பங்கர்
‘தோனியை 7ஆம் இடத்தில் இறக்கியதற்கு என்ன காரணம்?’ - சஞ்சய் பங்கர்
Published on

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் தோனி 7 ஆவது இடத்தில் களம் இறங்கியது குறித்து பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான சஞ்சய் பங்கர், 2014 ஆண்டு முதல் பேட்டிங் பயிற்சியாளராக இருந்து வருகிறார். இவர், 50 டெஸ்ட் மற்றும் 119 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார். இவர்தான், உலகக் கோப்பை தொடரிலும் பேட்டிங் பயிற்சியாளராக இருந்தார்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ்க்கு சஞ்சய் பங்கர் அளித்த சிறப்பு பேட்டியில், நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தோனி 7-வது இடத்தில் களமிறங்கியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்குப் பதிலளித்த அவர், “உலகக் கோப்பை தொடரின் தொடக்கத்தில் பேட்டிங் தரப்பினருக்கு முக்கியமான பங்களிப்பு இருந்தது. மிடில் ஆர்டரில் 4, 5, 6 ஆவது இடங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப வீரர்களை களமிறக்க திட்டமிட்டோம். குறிப்பாக 30-40 ஓவர்களில் ஏற்படும் சிக்கலை தவிர்க்க நினைத்தோம். இது ஒவ்வொரு வீரருக்கும் தெரியும். தொடக்கத்தில் தோனி 5வது இடத்தில் விளையாடி வந்தார்.

ஆப்கான் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு தோனியை மேலும் கீழ் வரிசையில் இறக்குவது என முடிவெடுத்ததாக விராட் கோலியே கூறியிருந்தார். அதாவது, 35 ஆவது ஓவர்களுக்கு பின் டெத் ஓவர்களில் தோனியின் அனுபவத்தை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக அந்த முடிவு எடுக்கப்பட்டது. 

தினேஷ் கார்த்திக்கை 5 ஆவது இடத்தில் களமிறக்குவது என ஓய்வு அறையில் முடிவெடுத்தோம். விக்கெட் வீழ்ச்சியை தடுக்கவே அவர் களமிறக்கப்பட்டார். பினிஷிங் பணியை முடிக்கவே தோனி கீழ் வரிசையில் களமிறக்கப்பட்டார். தோனியை 7 ஆவது இடத்தில் களமிறக்கியது அணியின் ஒட்டுமொத்த முடிவு என ரவி சாஸ்திரியே தெரிவித்திருந்தார். 

அதனால், அது என்னுடைய தனிப்பட்ட முடிவு மட்டுமே அல்ல. ஏன் அது என்னுடைய தனிப்பட்ட முடிவாக புரிந்து கொள்ளப்படுகிறது எனத் தெரியவில்லை” என்று கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com