2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் நடுவரிடம் வாக்குவாதம் செய்த தோனி, போட்டி முடிந்த பின்னர் அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டதாக நியூசிலாந்து அணியின் வீரரும் சிஎஸ்கேவின் ஆல்ரவுண்டருமான மிட்செல் சாண்ட்னர் கூறியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஐ.பி.எல் லீக் சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. ஆட்டத்தின் இறுதி ஓவரை ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் பென் ஸ்டோக்ஸ் வீசினார். ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் 3 பந்துக்கு 8 ரன்கள் வெற்றி இலக்குடன் சென்னை அணி விளையாடி கொண்டிருந்தது.
பென் ஸ்டோக்ஸ் ஒரு புல்டாஸ் பந்தை வீசினார். ஆனால் அதை நோ பால் எனத் தெரிவிக்க வந்த நடுவர், அதன் இறுதி முடிவை அறிவிக்காமல் நின்றார். இதனால் கோபமைடைந்த சென்னை அணியின் கேப்டன் தோனி கோபத்துடன் மைதானத்துக்குள் நுழைந்து நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இதனையடுத்து அந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றிப் பெற்றது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் பேசிய மிட்சல் சாண்ட்னர் இந்தச் சம்பவம் குறித்து மனம்திறந்துள்ளார் அதில் “ அன்று தோனி நடந்துக் கொண்ட விதம் எனக்கு மட்டுமல்ல அணியின் மற்ற வீரர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அன்று அவர் வெளிப்படுத்தியது கோபமல்ல. அது தோனி சென்னை அணியுடன் எவ்வளவு ஐக்கியமாக இருக்கிறார் என்பதை மட்டுமே காட்டியது. அன்று நாங்கள் போட்டி முடிந்தப் பின்பு பெவிலியன் நோக்கி சென்றுக் கொண்டிருந்தோம். அப்போது தோனி நடுவரிடம் பேசிக் கொண்டிருந்தார். அவர் தன் செயலுக்காக நடுவரிடம் நேரடியாக மன்னிப்பு கேட்டார்" என தெரிவித்துள்ளார்.