சப்தமில்லாமல் சாதனைகளை அடுக்கும் தோனி மற்றுமொரு சாதனையை களத்தில் நிகழ்த்தியிருக்கிறார். இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ஏழாயிரம் ரன்களை கடந்திருக்கிறார் முன்னாள் கூல் கேப்டன்.
'எனக்கு எண்டே கிடையாது’ என்ற சினிமா வசனம் போலிருக்கிறது மகேந்திர சிங்கின் தோனியின் கிரிக்கெட் களம். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு. சி.எஸ்.கே கேப்டன் பொறுப்பை துறந்தது என அவரைச் சுற்றிய செய்திகள் விளையாட்டுலகில் எப்போதும் பரபரப்பாவே இருக்க, அவரது அதிரடி அலை மட்டும் இன்னும் ஓயவில்லை. கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியில் சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப, தமது அனுபவத்தை திரட்டி அரைசதம் விளாசி அணியை சரிவிலிருந்து மீட்டார் தோனி. லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கடைசி கட்டத்தில் களமிறங்கிய தோனி, தாம் சந்தித்த முதல் பந்தையே சிக்சருக்கு பறக்க விட்டார். 6 பந்துகளில் அவர் குவித்த 16 ரன்கள் சி.எஸ்.கே வீரர்களுக்கு செம விருந்துதான்.
இந்தப்போட்டியில் இருபது ஓவர் போட்டிகளில் 7 ஆயிரம் ரன்களை கடந்து தோனி சாதித்தார். இந்தப் பட்டியலில் விராட் கோலி, ரோகித் ஷர்மா, சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவன், ராபின் உத்தப்பா ஆகியோருக்கு அடுத்தபடியாக ஆறாவது வீராக தம்மை இணைத்துக்கொண்டிருக்கிறார் தோனி. 349 போட்டிகளில் 28 அரைசதங்களுடன் இந்தச் சாதனையை அரங்கேற்றிருக்கிறார் முன்னாள் கூல் கேப்டன். அடுத்து, 350 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை அரங்கேற்ற காத்திருக்கிறார்.