சமூக வலைத்தளத்தில் எந்த அணி மாஸ்? சிஎஸ்கேக்கு முதல் இடம் இல்லையா?: ஒரு மில்லியன் ரிப்போர்ட்
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளம் என்பது மனித வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது என்றால் யாரும் மறுப்பதற்கில்லை. இந்த வலைத்தளங்களை வைத்தே இன்று சினிமா ஃபுரமோஷன் முதல் அரசியல்வாதிகள் ஃபுரமோஷன் வரை அனைத்தும் நடக்கிறது. இதில் விளையாட்டு மட்டும் விதிவிலக்கா என்ன? தற்போது ஐபிஎல் ஜுரம் எல்லோரிடமும் பற்றிக் கொண்டு இருக்க, எந்தெந்த அணியை எவ்வளவு பேர் பின் தொடர்கிறார்கள் என்பதுதான் அந்தெந்த அணியின் கெளரவ பிரச்னையாகவே பார்க்கப்படுகிறது. அதுவும் தனக்கு பிடித்த வீரர்கள் என்றால் அவரை எந்த மாநிலத்திற்கு விளையாடினாலும் வெறித்தனமாக ஆதரிப்பார்கள் நம் ரசிகர்கள். அவர்களின் ஆதரவு சமுக வலைத்தளங்களில் யார் அதிகம் பெற்றுள்ளனர் என்பதுதான் இந்தப் பட்டியல் சொல்லும் உண்மை!
ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொருத்தவரை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த வருடம் ரகானே தலைமையில் களம் காண்கிறது. பல முன்னணி வீரர்கள் விளையாடிய, விளையாடிவரும் ராஜஸ்தான் அணி சமூக வலைத்தளங்களில் பின் தொடரும் அணிகளில் கடைசி இடத்தில் உள்ளது. பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி உரிமையாளராக உள்ள ராஜஸ்தான் அணியை பேஸ்புக் பக்கத்தில் 3.5 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். அதேபோல் ட்விட்டர் பக்கத்தில் 0.94 மில்லியனும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 0.164 என மொத்தமாக 4.604 மில்லியன் போர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பின் தொடர்கிறார்கள்.
டெல்லி டேர்டெவில்ஸ்
டெல்லி அணி பொருத்தவரை ஐபிஎல் தொடரில் இதுவரை சொல்லிக்கொள்ளும்படியாக விளையாடவில்லை என்பதை ஐபிஎல் தொடக்கம் முதல் கவனித்து வருபவர்கள் அறிவார்கள். சேவாக், கம்பீர், என பல முக்கிய வீரர்கள் கேப்டனாக இருந்து இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் டெல்லி அணிக்கு ஒவ்வொரு தொடருக்கும் ஒரு கேப்டன் மாறிக்கொண்டே தான் இருக்கிறார்கள். கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மதிக்கும் வீரர்களில் ஒருவரான ட்ராவிட் கடந்த முறை அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார். இம்முறை இளம் வீரர்களை அதிகம் கொண்ட டெல்லி அணியை பேஸ்புக்கில் பின் தொடர்வோரின் எண்ணிக்கை 4.4 மில்லியன். ட்விட்டர் பக்கத்தில் 1.04 மில்லியனும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 0.302 மில்லியன் பேரும் பின்தொடர்கிறார்கள். இந்தப் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ள டெல்லி அணியை மொத்தமாக 5.742 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையில் டெக்கான் சார்ஜர்ஸ் என்கிற பெயரில் விளையாடிவந்த இந்த அணியை அதன் உரிமையாளர் விற்க முன் வர சென்னையை சேர்ந்த நிறுவனம் ஒன்று அந்த அணியை வாங்கியது. அதன் பிறகு சன்ரைசர்ஸ் ஐதராபாத் என் பெயர் சூட்டப்பட்ட இந்த அணி 2016-ம் ஆண்டு வார்னர் தலைமையில் சாம்பியன் பட்டத்தையும் வென்றது. வார்னர் இந்த சீசனில் விளையாட முடியாத நிலையில் நியூஸ்லாந்து அணி கேப்டன் வில்லியம்சன் தலைமை ஏற்றுள்ள ஐதராபாத் அணினை பேஸ்புக்கில் 5.7 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். ட்விட்டரில் 1.67 மில்லியன் பேரும், இன்ஸ்டாகிராமில் 0.375 மில்லியன் என மொத்தமாக 7.745 மில்லியன்களோடு இந்தப் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
பிரபல பாலிவுட் நடிகை பிரித்தி ஜிந்தா பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவர். முதலில் யுவராஜ் சிங் தலைமையில் களம் கண்ட இந்த அணி படு தோல்வியை சந்தித்தது. இந்த அணியும் டெல்லி அணிக்கும் போல இது வரை நிலையான கேப்டன்கள் கிடைக்கவில்லை. யுவராஜ் சிங்கில் தொடங்கி இப்போது அஸ்வினில் வந்து நிற்கிறது. 2018 சீசனை பொருத்தவரை யாரும் எதிர் பார்க்கா வண்ணம் கலக்கி வருகிறது. தமிழக வீரர் அஸ்வின் தலைமையும் அபாரமாக இருகிறது. இந்த சீசனில் முதல் இடத்தில் உள்ள பஞ்சாப் அணிக்கு பேஸ்புக் பக்கத்தில் பின் தொடர்பவர்கள் மட்டும் 8.3 மில்லியன்! ட்விட்டரில் 1.62 மில்லியன், இன்ஸ்டாகிராமில் 0.494 மில்லியன் என மொத்தமாக 10.414 மில்லியன்களோடு இந்தப் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
இதுவரை சாம்பியன் பட்டம் வென்றதில்லை என்றாலும் அந்த அணியில் உள்ள நட்சத்திர வீரர்களுக்காகவே பெங்களூர் அணி பலருக்கும் பிடிக்கும். இந்தியாவின் சுவர் என்று அழைக்கப்படும் ட்ராவிட் தொடக்க காலத்தில் வழி நடத்தி வந்தார். பின்னர் அவர் அணி மாற ட்ராவிட் தலைமையில் விளையாடி வந்த கோலி பெங்களூர் அணி கேப்டனாக நியமிக்கப்பட்டார். அது மட்டுமின்றி ரசிகர்களால் மிஸ்டர் 360 என செல்லமாக அழைக்கப்படும் டிவில்லியர்ஸுக்கு ரசிகர் பட்டாளத்திற்கு அளவே இல்லை. இந்த அணி எல்லோருக்கும் தெரிய காரணமாக இருந்தவர் அந்த அணியின் உரிமையாளர் விஜய் மல்லையாதான் ! இதுவரை பேஸ்புக்கில் 9.2 மில்லியனும், ட்விட்டரில் 2.71 மில்லியன் என அசத்துகிறது. அதேபோல் இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் என மொத்தமாக 13.31 மில்லியனோடு இந்தப் பட்டியலில் 4-வது இடத்தில் வீறுநடை போடுகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
பாலிவுட் பாட்ஷாவின் அணி ! வேறென்ன வேண்டும் . ஆரம்பம் முதலே எதிர்பார்ப்புக்கு உரிய அணியில் ஒன்று. முதல் சீசனில் கங்குலி தலைமையில் களம் கண்டு படுதோல்வி அடைந்தாலும் அடுத்தடுத்த சீசன்களில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தால் 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. நீண்ட நாட்களாக கம்பீர் வழிநடத்தி வந்த இந்த அணி, இப்போது தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கையில். இந்த சீசனிலும் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்த அணி பேஸ்புக்கில் பின் தொடர்பவர்கள் மட்டும் 10.5 மில்லியன். ட்விட்டர் பக்கத்தில் 3.61 மில்லியனும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 0.452 மில்லியன் என்று மொத்தமாக 14.562 மில்லியன் என இப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
போட்டியை நீ எங்கு வேண்டுமானாலும் நடத்திக்கோ ஆன அங்கெல்லாம் மஞ்சள் நிற ஆடையே அதிகமாக இருக்கும் என்று சொல்லாமல் சொல்லுகிறார்கள் சென்னை ரசிகர்கள். ஏன் இப்போது கூட சென்னையில் ஐபிஎல் இல்லை என்றதும் புனே வரை சென்று ஆதரவு அளித்தார்கள். சென்னை அணியும் ராஜஸ்தான் போல் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு களம் காண்கிறது. தொடக்க முதல் இன்று வரை தோனி தலைமையில் களம் காண்பது சென்னை அணிக்கு மற்றொரு சிறப்பு . இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு வீரர்களை ஏலம் எடுத்த போது சொல்லிக் கொள்ளும் படி ஸ்டார் வீரர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது.ஆனால் அதையெல்லாம் தன்னுடைய தலைமை பண்பினால் தூள்தூளாக்கி இருகிறார் தல தோனி. 2010 மற்றும் 2011 ஆண்டுகளில் தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை அணியை பேஸ்புக்கில் 10.8 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். ட்விட்டர் பக்கத்தில் 3.6 மில்லியன் மற்றும் இன்ஸ்டாகிராமில் 0.325 என மொத்தமாக 15.725 மில்லியன் என இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ்
கிரிக்கெட்டின் கடவுளாக பார்க்கப்படும் சச்சின் தலைமையில் ஆரம்பத்தில் களம் கண்டது மும்பை அணி. முதல் ஒரு சில சீசனில் பெரிய தாக்கத்தை அந்த அணியால் ஏற்படுத்த முடியவில்லை. ரோகித் கேப்டனான பிறகு எளிதில் கணிக்க முடியாத அணியாக மாறிய மும்பை 2013 மற்றும் 2015ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. முகேஷ் அம்பானி ஏலம் எடுத்துள்ள இந்த அணி , 2018 சீசனில் யாரும் எதிர்பார்க்க வண்ணம் தொடர்ந்து சொதப்பி புள்ளிப் பட்டியலில் கடைசி இடம் வகிக்கிறது. இப்போதும் சச்சின் தலைமை பயிற்சியாளராக உள்ள மும்பையை பேஸ்புக்கில் மட்டும்12 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். ட்விட்டரில் 4.29 மில்லியன், இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் என மொத்தமாக 17.69 மில்லியனோடு தன்னுடைய ஆதிக்கத்தை முதல் இடத்தில் தொடர்கிறது.