கபடி.. கபடி... திறமையால் கோடிகளை அள்ளிய வீரர்

கபடி.. கபடி... திறமையால் கோடிகளை அள்ளிய வீரர்
கபடி.. கபடி... திறமையால் கோடிகளை அள்ளிய வீரர்
Published on

இந்திய விளையாட்டு ரசிகர்களுக்கான அடுத்த திருவிழா விரைவில் தொடங்கவுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பிரபலம் அடைந்ததையடுத்து மற்ற விளையாட்டு போட்டிகளும் இதே பாணியில் நடைப்பெற்று வருகிறது.  இந்நிலையில் 6வது ப்ரோ கபடி லீக் தொடருக்கான ஏலம் மும்பையில் நேற்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த ஏலத்தில் மொத்தம் 422 வீரர்கள் பட்டியலில் உள்ளனர். 12 அணிகளின் நிர்வாகிகள் இந்த ஏலத்தில் பங்கேற்றனர். ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 18 வீரர்களை அதிகபட்சமாக 24 வீரர்களையும் தேர்வு செய்யலாம். ஒரு அணியால் 4 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே ஒப்பந்தம் செய்யமுடியும்.

ஏலத்தில் வீரர்களுக்கான அடிப்படை விலை நான்கு பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டது. புதிதாக களமிறங்கும் வீரர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.6.6 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவு வீரர்களுக்கு ரூ.20  லட்சம், பி பிரிவு வீரர்களுக்கு ரூ.12 லட்சம், சி பிரிவு வீரர்களுக்கு ரூ.8 லட்சம்,டி பிரிவுக்கு ரூ.5 லட்சம் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய ஏலத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி இந்திய வீரர் மோனு கோயத்தை 1.51 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. ஆரம்பம் முதலே மோனு கோயத்துக்கு கடுமையான போட்டி  இருந்தது இறுதியில் ஹரியான ஸ்டீலர்ஸ் அணி அவரை கைப்பற்றியது. இந்த ஏலத்தில் இவர் தான் அதிக விலைக்கு போயுள்ளார். மேலும் சில வீரர்களும் 1 கோடிக்கு மேல் ஏலம் போயுள்ளனர். தீபக் ஹூடாவை ஜெய்ப்பூர் அணி 1.15 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. ராகுல் சௌத்திரியை தெலுங்கு டைட்டன் அணி 1.29 கோடி ரூபாய்க்கு  ஏலத்தில் எடுத்தது. 

மோனு கோயத் சி்றந்த ரைடர். ப்ரோ லீக்கில் இதுவரை அவர் விளையாடியுள்ள 39 ஆட்டங்களில் 250 புள்ளிகளை பெற்றுள்ளார். சராசரியாக ஒரு ஆட்டத்தில் 6.41 புள்ளிகள் வைத்துள்ளார். இதனால் தான் இவருக்கு இந்த ஆண்டு இவ்வளவு மவுசு. ஐபிஎல் கிரிக்கெட் ஏலத்தில் தலைசிறந்த வீரர்கள் சிலர் ஏலம் போகவில்லை சிலர் 1 கோடிக்கும் குறைவாகவே ஏலம் போயினர். கிரிக்கெட் அளவுக்கு பணம் கொழிக்கும் விளையாட்டாக இல்லாத போதும் ப்ரோ கபடி ஏலத்தில் தனது திறமையால் பல கிரிக்கெட் வீரர்களை விட அதிக விலைக்கு ஏலம் போயுள்ளார் மோனு கோயத். ப்ரோ கபடி லீக் அக்டோபர் மாதம் தொடங்கி தொடர்ந்து 3 மாதங்களுக்கு நடைபெற உள்ளது.

2018 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்ற சென்னை அணி வீரர்கள் இம்ரான் தாஹீர் (1 கோடி), லுங்கி ங்கிடி (50 லட்சம்), மும்பை வீரர்  டுமினி ( 1 கோடி), டெல்லி டேர்டெவில்ஸ் ஜேசன் ராய் ( 1.50 கோடி), சன் ரைசர்ஸ் ஹைதராபாத் கிறிஸ் ஜோர்டன் (1 கோடி) ஆகியோரை விட மோனு கோயத் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com