இந்தியக் கிரிக்கெட் வீரர் முகம்மது சமி, தனது மனைவியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, கடந்த சில நாட்களாக சர்ச்சைக்கு ஆளாகியுள்ளார். அவர் மனைவி ஹசான் ஜஹான் பல்வேறு குற்றச்சாட்டுகளை சமி மீது முன்வைத்துள்ளார். அத்துடன் ஹசான் ஜஹான் கொல்கத்தா ஜாதவ்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், கொலை முயற்சி, குடும்ப வன்முறை, வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஷமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரங்கள் காரணமாக பிசிசிஐயும் அவரது பெயரை ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கியது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஷமி, “இந்தப் பிரச்னை பேசித் தான் தீர்க்க முடியும். அதைவிட சிறந்த வழி இல்லை. நாங்கள் மீண்டும் சேர்வது எங்கள் மகளுக்கு நல்லது. இந்தப் பிரச்னை தீர்ப்பதற்காக நான் கொல்கத்தா செல்ல தயாராக இருக்கிறேன். ஹசான் ஜஹான் எப்போது பேச நினைக்கிறாரோ, அப்போது நான் பேசுவதற்கு தயாராக இருப்பேன்” என்று கூறினார்.