தன் மீது எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக விரைவில் விசாரணை நடத்த பிசிசிஐ-க்கு முகமது ஷமி கோரிக்கை
விடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது, அவரது மனைவி ஹசின் ஜஹான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பிருப்பதாகவும், அவர்களுடன் தனிப்பட்ட முறையில் நேரம் செலவழிப்பதாகவும் அவரது மனைவி முகநூல் பக்கத்தில் ஆதாரங்களுடன் தெரிவித்தார். அத்துடன் பாகிஸ்தான் பெண்ணிடம் பணம் பெற்றுக்கொண்டு இந்தியாவிற்கு எதிராக ஷமி பேட்ச்-ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாகவும் திடுக்கிடும் தகவல்களை அவர் வெளியிட்டார். இதனால் இந்தாண்டுக்கான பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்ததில் ஷமியின் பெயர் இடம்பெறவில்லை. இது தாற்காலிக முடிவு தான் என பிசிசிஐ தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. மேலும் முகமது ஷமி மேட்ச்-ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டாரா என்பது குறித்தும் பிசிசிஐ விசாரித்து வருகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள ஷமி, “என் மனைவியுடனான பிரச்னைக்கும், எனது கிரிக்கெட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த குற்றச்சாட்டுகள் எனது கிரிக்கெட் வாழ்க்கையை இழிவுபடுத்தவே சுமத்தப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் தொடர்பாக விரைவில் விசாரணையை தொடங்க பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்துள்ளேன். நான் குற்றமற்றவர் என்று நிரூப்பிக்கப்பட்டால், எனது பயிற்சியை தொடர்வேன். எனவே எனது கிரிக்கெட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.” என்றார்.