சர்வதேச டெஸ்ட் போட்டியில் 79 ஆண்டுகளுக்கு பின் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை மொயின் அலி பெற்றார்.
இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா இடையே 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லண்டனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட்போட்டியில் 492 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியடைந்தது.
இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மொயின் அலி தென்னாப்பிரிக்கா வீரர்கள் டீன் எல்கர், ரபடா, மோர்னே மோர்கல் ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். அதுமட்டுமல்லாமல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் 79 ஆண்டுகளுக்கு பின் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். ஆம்! இதற்கு முன்பாக 1938 ஆம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் டாம் கோடர்ட் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் மோயின் அலி மொத்தமாக 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்று முன்னிலையில் உள்ளது இங்கிலாந்து அணி. இதையடுத்து 4-வது டெஸ்ட் போட்டி வரும் 4 ஆம் தேதி தொடங்குகிறது. போட்டியை வென்று கோப்பையை கைப்பற்றும் அணி எது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.