ஒரு காலத்துல இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி பேட்ஸ்மேன்கள் சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் அவ்வளவு திறமை வாய்ந்தவர்களாக இருந்தார்கள். அப்போதெல்லாம் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இருந்த ஒரே பிரச்னை வெளிநாட்டு ஆடுகளங்களளில் மேல் எழும்பும் வேகப்பந்துகளை விளையாடுவதில்தான் சிரமம் இருந்தது. இதனாலேயே பல வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் மோசமான தோல்விகளை கண்டது இந்திய அணி. ஆனால் ஆசிய ஆடுகளங்களில் நாம்தான் சிங்கம். அதுவும் எப்பேர்பட்ட ஸ்பின்னர்களையும் அசால்டாக கையாள்வார்கள் நம் பேட்ஸ்மேன்கள். இதெல்லாம் கடந்த காலம்!
வெளிநாட்டு ஆடுகளங்களில் வேகப்பந்து வீச்சை சமாளிக்கும் திறனும், வெற்றியும் கங்குலி கேப்டன் ஆன பின்பு படிப்படியாக அதிகரித்தது. இது தோனி கேப்டனான பின்பு மேலும் வலுவானது. பிறகு கோலி கேப்டன் ஆன பின்பு எந்தெந்த நாடுகளில் நாம் டெஸ்ட் தொடரை வென்றோம் என்பதெல்லாம் இப்போது வரலாறு. இப்போது வேகப்பந்துவீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக கையாள கற்றுக்கொண்டார்கள். ஆனால் ஸ்பின்களை எதிர்கொள்வதில் இப்போதுள்ள இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சிரமம் இருப்பதாகவே தெரிகிறது. அதுவும் கடந்த சில ஆண்டுகளாக ஸ்பின் பவுலர்களை சிறப்பாக விளையாடும் விராட் கோலிக்கே இப்போது சுழற்பந்தால் அலர்ஜி ஏற்பட்டு இருக்கிறது.
90-கள் மற்றும் 2000 ஆம் ஆண்டு காலக்கட்டங்களில் உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷேன் வார்னே, முத்தையா முரளிதரன், சக்லைன் முஷ்டக், முஷ்டாக் அகமது, டானிஷ் கனேரியா, பால் ஆடம்ஸ், டேனியல் வெட்டோரி, கிராம் ஸ்வான், ஸ்டுவர்ட் மெக்கில் ஆகியோர் கோலாச்சினர். இவர்களை அனைவரும் உலக சாதனைகளை செய்துள்ளனர். ஆனால் இவர்களின் அச்சுறுத்தும் ஸ்பின்களை பிரமாதமாக விளையாடினர் நம் பேட்ஸ்மேன்கள். மிக முக்கியமாக சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விவிஎஸ் லட்சமணன் ஆகியோர் ஸ்பின்னர்களை விளையாடும் காட்சி இப்போதும் கண்முன்னே தோன்றும். 1998 இல் சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஷேன் வார்னேவை சச்சின் எதிர்கொண்டவிதம் இப்போதுள்ள பேட்ஸ்மேன்களுக்கு பாடம்.
அதேபோல 2002 இல் கொல்கத்தாவில் நடைபெற்ற டெஸ்ட்டில் லட்சுமணனும், ராகுல் டிராவிட்டும் ஆடிய ஆட்டம் காலங்கள் கடந்து பேசக் கூடியது. இதேபோல சவுரவ் கங்குலியும், விரேந்திர ஷேவாக்கும் ஸ்பின்னர்களை கையாளும் விதம் வேறுமாதிரியாக இருக்கும். ஆனால் இப்போதுள்ள இளம் பேட்ஸ்மேன்களில் எத்தனை பேர் சுழற்பந்துவீச்சாளர்களை லாவகமாக எதிர்கொள்கிறார்கள்? அண்மைகாலமாக இப்போதிருக்கும் டாப் பேட்ஸ்மேனான விராட் கோலியே சுழற்பந்தை எதிர்கொள்ள சிரமத்தை சந்தித்து வருகிறார். இப்போதுள்ள இந்திய அணியில் புஜாரா, விராட் கோலி மற்றும் ஆல் ரவுண்டர் அஷ்வின் மட்டுமே சிறப்பாக கையாள்வார்கள். இந்நிலையில் வரும் 9 ஆம் தேதி நாக்பூரில் தொடங்க இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் ஸ்பின்னர்களை எப்படி எதிர்கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஆஸ்திரேலிய அணியின் சிறந்த ஸ்பின்னரான நாதன் லயனுடன் அந்த அணி களம் காண்கிறது. மேலும் மற்றொறு ஸ்பின்னரான டோட் மர்பியும், அக்சன் அகர் ஆகியோரும் இந்தியாவுக்கு எதிராக களமிறக்கப்படலாம் என தெரிகிறது. இந்திய அணியின் மற்றொரு பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயரும் ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில் வல்லவர், ஆனால் அவரும் காயத்தின் காரணமாக இடம்பெறாததால் சூர்யகுமார் யாதவ் அணியில் இடம்பிடிப்பார் என தெரிகிறது. ரஞ்சிக் கோப்பையில் சூர்யகுமார் சிறப்பான ரெக்கார்டுகளை வைத்திருப்பதால் அவர் ஸ்பின்னர்களை தேர்ந்து கையாள்வார் என நம்பலாம். இத்தனை பேர் இருந்தாலும் அனைவரின் பார்வையும் கோலியின் மீதே திரும்பியிருக்கிறது. அதிலும் ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில். 2020 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் ஆவரேஜ் 30 ஆக மட்டுமே இருக்கிறது.
ஆஸ்திரேலியாவின் ஸ்டார் ஸ்பின்னர் நாதன் லயானிடம் 7 முறை அவுட்டாகி இருக்கிறார் கோலி. அண்மையில் கூட இது குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் "பொதுவாகவே விராட் கோலி சுழல் பந்தை எதிர்கொள்வதில் சிரமப்பட்டு வருகிறார். இப்போதிருக்கும் பெரிய கேள்வி என்னவென்றால், ஆஸ்திரேலிய அணியின் நாதன் லியோன், ஆஷ்டன் அகர் ஆகியோரின் சுழல் பந்து வீச்சை கோலி எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதுதான். சுழல் பந்தை எதிர்கொள்ள விராட் கோலி இன்னும் கூடுதல் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் சுழலுக்கு எதிரான அவருடைய ஸ்ட்ரைக் ரேட்டும் குறைந்துவிட்டது என்று நினைக்கிறேன்'' என்றார்.
எதனால் இந்தக் காலக்கட்ட இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள சிரமப்படுகிறார்கள் என்ற கேள்விக்கு பலரும் பலவிதமான கருத்துகளை முன்வைத்திருக்கிறார்கள் அதில் மிக முக்கியமாக இப்போதுள்ள பேட்ஸ்மேன்கள் சில பேர் ஐபிஎல், டி20 விளையாடிய அனுபவங்களை வைத்து டெஸ்ட் அணியில் உள்ளனர். டெஸ்ட் போட்டி விளையாடுவது என்பது மிகவும் கடினமானது. டெஸ்ட் அணியில் இடம்பெறுவதற்கு ரஞ்சிப் போட்டியே அடிப்படையாக இருக்க வேண்டும். ரஞ்சிப் போட்டியில் சிறப்பாக பங்களிக்கும் வீரர்களையே தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான் சுழற்பந்துகளை எதிர்கொள்வதில் அனுபவம் இருக்கும் என்பது பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது.
இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விரைவில், அதாவது இன்னும் 2 ஆண்டுகளில் புஜாரா, ரோகித் சர்மா, கோலி ஆகியோர் விலகக்கூடும். எனவே இப்போதே நாம் டெஸ்ட் அணியை அதற்கேற்றார்போல கட்டமைக்க வேண்டும். ரஞ்சிக் கோப்பையில் பல ஆண்டுகளாக திறமையாக விளையாடும் வீரர்களை கண்டறிந்து இப்போதே படிப்படியாக அணியில் நுழைக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்திலும் இப்போது இருப்பது போல டெஸ்ட் அணி வலுவாக இருக்கும் என்பதே கிரிக்கெட் வல்லுனர்களின் பார்வையாக இருக்கிறது.