"இதுவே சரியான தருணம்" -சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மிதாலி ராஜ் ஓய்வு!

"இதுவே சரியான தருணம்" -சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மிதாலி ராஜ் ஓய்வு!
"இதுவே சரியான தருணம்" -சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மிதாலி ராஜ் ஓய்வு!
Published on

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஒரு செய்தியில் "அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக" தனது முடிவை அறிவித்து, தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

"அணி மிகவும் திறமையான இளம் வீராங்கனைகளின் கைகளில் இருப்பதால், இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதால், எனது விளையாட்டு வாழ்க்கைக்கு முடிவுரை அமைக்க இது சரியான நேரம் என்று நான் உணர்கிறேன்." என்று அந்த அறிவிப்பில் மிதாலி ராஜ் குறிப்பிட்டு இருந்தார். மிதாலி ராஜ் 12 டெஸ்ட் போட்டிகள், 232 ஒருநாள் போட்டிகள் மற்றும் 89 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மிதாலி ராஜ் கிரிக்கெட் வாழ்க்கை மிகவும் கொண்டாடப்பட்ட கேரியர்களில் ஒன்றாகும்.

ஒருநாள் போட்டிகளில் 64 வது அரை சதம். ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் 50.68 சராசரியில் ஏழு சதங்கள் உட்பட 7805 ரன்களை விளாசியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில், அவர் ஒரு சதம் மற்றும் நான்கு அரை சதங்களுடன் 43.68 சராசரியுடன் 699 ரன்களை குவித்துள்ளார். டி20 போட்டிகளில் 17 அரை சதங்கள் விளாசி 37.52 சராசரியுடன் 2364 ரன்கள் எடுத்துள்ளார். டி20 போட்டிகளில் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் விளாசி இருந்தார் மிதாலி.

அவரது ஒட்டுமொத்த ரன்களின் எண்ணிக்கை 10,868. பெண்கள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்த வீராங்கனை மிதாலி ராஜ்தான்! மேலும் பெண்கள் ஒருநாள் போட்டிகளில் மிதாலி குவித்த 7805 ரன்களுக்கு மேல் எந்த பேட்டரும் அடித்ததில்லை. பெண்கள் ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக ஏழு அரைசதங்கள் அடித்த முதல் வீரரும் மிதாலி ராஜ்தான்! பெண்கள் ஒருநாள் போட்டிகளில் அதிக அரைசதங்கள் அடித்தவரும் மிதாலிதான்! 64 வது அரைசதங்களை ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளாசியிருந்தார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் 50 ஓவர் உலகக் கோப்பையின் போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவுக்காக அவர் கடைசியாக விளையாடினார். இதில் இந்தியா மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது. அந்த போட்டியில் இந்தியாவின் கேப்டன் மிதாலி ராஜ், 84 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். மகளிர் கிரிக்கெட்டில் சாதனைப்பட்டியல்களை தவறாது நிரப்பிக் கொண்டிருந்த மிதாலி ராஜ் என்கிற வீராங்கனையின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

களத்தில் ஒரு வீராங்கனையாக மட்டுமே தாம் ஓய்வு பெற்றுள்ளதாகவும், ஆனால் 2வது இன்னிங்ஸ்கை மக்கள் ஆதரவுடன் துவங்க தயாராக இருப்பதாகவும் மிதாலி தனது ஓய்வுச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஒரு பயிற்சியாளராக அவரது 2வது இன்னிங்ஸ் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com