இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில், ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அபார சாதனை படைத்தார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் நேற்று மோதின. பர்மிங்காமில் நடைபெற்ற இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக ஸ்மித் 85 ரன்களை சேர்த்தார். 224 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் நிதானமாக ரன்களைச் சேர்த்தனர். 39 ரன்களில் பேர்ஸ்டோவ் ஆட்டமிழக்க, அதிரடியை வெளிப்படுத்திய ஜேசன் ராய் 5 சிக்சர்கள் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஜோ ரூட், இயான் மோர்கன் கூட்டணி சீரான வேகத்தில் ரன்களைச் சேர்க்க, 33 ஆவது ஓவரிலேயே இங்கிலாந்து, வெற்றி இலக்கை எட்டியது.
8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 27 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியை உலகக்கோப்பை போட்டிகளில் வென்றதில்லை என்ற வரலாற்றையும் மாற்றியது. இறுதிப்போட்டியில் நியூசிலாந்துடன் வரும் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்த வுள்ளது.
நேற்று நடந்த போட்டியின் போது இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டோவ் விக்கெட்டை, ஸ்டார்க் வீழ்த்தினார். அப்போது அவர் நடப்பு உலகக் கோப்பை தொடரில் 27 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்தார். உலகக் கோப்பைத் தொடரில் அதிக விக்கெட் வீழ்த் தியவர்கள் பட்டியலில், ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மெக்ராத் முதலிடத்தில் இருந்தார். அவர் 2007 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அவர் சாதனைத் தகர்க்கப்படாமல் இருந்தது. இப்போது மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான ஸ்டார்க் அந்தச் சாதனையை தகர்த்துள்ளார்.