ஸ்விங்கில் மிரட்டிய மிட்சல் ஸ்டார்க்! சொந்த மண்ணில் குறைவான ரன்னில் ஆல்அவுட்டான இந்தியா!

ஸ்விங்கில் மிரட்டிய மிட்சல் ஸ்டார்க்! சொந்த மண்ணில் குறைவான ரன்னில் ஆல்அவுட்டான இந்தியா!
ஸ்விங்கில் மிரட்டிய மிட்சல் ஸ்டார்க்! சொந்த மண்ணில் குறைவான ரன்னில் ஆல்அவுட்டான இந்தியா!
Published on

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 117 ரன்களுக்கு சுருண்டது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியை இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணிக்கு திரும்பிய நிலையில், முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.

முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி கொடுத்தார், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க். முதல் ஓவரின் மூன்றாவது பந்தை ஒயிட் ஆஃப் டெலிவரியாக முழு லெந்த் பந்தாக வீச, அதை பவுண்டரிக்கு விரட்ட அடித்த சுப்மன் கில் காற்றில் அடிக்க கவரில் இருந்த லபுசனே கைகளில் சென்று சேர்ந்தது. முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தாலும் பிறகு கைக்கோர்த்த மூத்த வீரர்களான ரோகித் மற்றும் கோலி இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளாக அடித்து நம்பிக்கை கொடுத்தனர்.

ஒரே ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்டார்க்!

விராட் கோலி மற்றும் ரோகித் அடுத்தடுத்து பவுண்டரிகளாக விரட்ட 4 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்து நல்ல பவர்பிளே ரன்களை கடக்கும் நிலையில் இருந்தது இந்தியா. அப்போது 5ஆவது ஓவரை வீச வந்த ஸ்டார்க் 4ஆவது பந்தில் கேப்டன் ரோகித் சர்மாவை ஸ்லிப் கேட்சில் வெளியேற்ற, அடுத்து வந்த சூர்யகுமார் யாதவிற்கு கணிக்கவே முடியாத இன் - ஸ்விங் பந்தை வீசிய ஸ்டார்க், அவரை மீண்டும் 0 ரன்னில் வெளியேற்றினார். கடந்த முதல் போட்டியிலும் சூர்யகுமார் யாதவ் ஸ்டார்க் பந்துவீச்சில் டக் அவுட்டாகி (கோல்டன் டக்) வெளியேறியிருந்த நிலையில், தொடர்ச்சியாக இரண்டாவது முறையும் முதல் பந்திலேயே வெளியேற்றி அசத்தினார் ஸ்டார்க். பின்னர் அடுத்தடுத்து பந்துவீச வந்த மற்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீச, அதை எதிர்கொள்ள முடியாமல் திணறிய இந்திய பேட்டர்கள் சீரான இடைவெளியில் எளிதாக விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர்.

5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய ஸ்டார்க்!

ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுபுறம் நிலைத்து நின்ற விராட் கோலி போட்டியை தொடர்ந்து எடுத்துச் செல்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், நாதன் எலிஸ் வீசிய இன் - ஸ்விங் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்து 31 ரன்களுக்கு வெளியேறினார் கோலி. பிறகு அப்பாட்டும் (Sean Abbott) அவருடைய பங்கிற்கு விக்கெட்டுகளை கைப்பற்ற இந்திய அணி 103 ரன்னிற்கு 9 விக்கெட்டுகளை இழந்தது.

4 விக்கெட்டுகள் எடுத்திருந்த நிலையில் 5ஆவது விக்கெட்டிற்கு பந்துவீச வந்த ஸ்டார்க்கை இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட்டார் அக்சர் பட்டேல். ஆனால் அந்த ஓவரில் கடைசி 2 பந்துகள் இருந்த நிலையில் பட்டேல் சிங்கிள் செல்ல, 26ஆவது ஓவரின் கடைசி பந்தில் முகமது சிராஜை போல்டாக்கி தனது 5ஆவது விக்கெட்டை எடுத்து அசத்தினார் மிட்சல்.

இறுதியில் 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து சுருண்டது இந்தியா. இந்திய ஆடுகளங்களில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மிகக்குறைவான ரன்களை பதிவு செய்துள்ளது இந்திய அணி. 5 விக்கெட்டுகளை எடுத்த ஸ்டார்க், இதனுடன் சேர்த்து தனது 9ஆவது ஃபைவ்-பார் எடுத்து அசத்தியுள்ளார். 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சிறிய இலக்கோடு களமிறங்கவிருக்கிறது ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக குறைவான ஸ்கோர்!

இந்திய அணியை பொறுத்தவரை சொந்த மண்ணில் குறைவான ஸ்கோரை (86), 1986 ம் ஆண்டு கான்பூரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் பதிவு செய்தது. அதன்பிறகு அகமதாபாத்தில் 1993 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 100 ரன்னிலும், 2017 ஆம் ஆண்டு தரம்சாலாவில் இலங்கைக்கு எதிராக 112 ரன்களும் எடுத்து இந்திய அணி ஆட்டமிழந்து இருந்தது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய மண்ணில் இதுதான் குறைவான ஸ்கோர். இருப்பினும் ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 63 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆகி இருக்கிறது. 2000ம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் 100 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com