'டார்கெட் ஒலிம்பிக் போடியம்' திட்டத்தின் கீழ் நீச்சல் வீரர்களுக்கு இந்த ஆண்டு நிதி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம். பயிற்சி மற்றும் போட்டி ஆண்டு காலண்டருக்கான திட்டத்தின் கீழும் இந்த நிதி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிஷன் ஒலிம்பிக் செல்லின் ஒப்புதலை பெற்ற பிறகு சஜன் பிரகாஷ், ஸ்ரீஹரி நடராஜ், மானா படேல் மற்றும் கெனிஷா குப்தா ஆகிய வீரர்களுக்கு இந்த நிதியுதவி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள ஆகும் செலவுகள், பயிற்சி முகாம்களில் பங்கேற்க ஆகும் செலவுகள் மாதிரியானவை கிடைக்கும் எனத் தெரிகிறது.
ஐந்து வீரர்களில் சஜன் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ள முக்கியமான சில நீச்சல் போட்டிகளில் பங்கேற்க உள்ளார். சஜன் பிரகாஷ் மற்றும் ஸ்ரீஹரி டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிதி உதவியின் கீழ் வீரர்களுக்கான பயிற்சியாளர் மற்றும் பிஸியோதெரபிஸ்ட் கட்டணமும் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.