ஆன்லைன் ரம்மி அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர், பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு 36 நாட்களாகியும் இன்னும் ஒப்புதல் அளிக்காதது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை செய்பவருடைய எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கிய நிலையில் தான், இதற்கான அவசரச் சட்டம் கொண்டு வருவதற்கு தமிழக அரசு திட்டமிட்டு ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து அறிக்கையும் பெறப்பட்டது.
அதன் அடிப்படையில் அவசரச் சட்டம் கடந்த அக்டோபர் 7-ம் தேதி கொண்டுவரப்பட்டு ஆளுநருக்கு ஒப்புதல் அனுப்பப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி, அன்றைய தினமே அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்ற நிலையில், ஆன்லைன் ரம்மி போன்ற இணைய விளையாட்டுகளை தடை செய்யும் சட்ட மசோதா, பேரவையில் கடந்த அக்டோபர் மாதம் 19-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அந்த சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் 36 நாட்கள் கடந்தும் ஆளுநர், இதுவரை ஆன்லைன் விளையாட்டை தடை செய்யும் சட்டம் மசோதாவுக்கு ஒப்புதல் தரவில்லை. அவசரச் சட்டத்தில் உள்ள அதே சரத்துகள் தான் சட்ட மசோதாவாகவும் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் சந்தேகங்கள் இருந்தால் அது தொடர்பான விளக்கத்திற்காக ஆளுநர் திருப்பி அனுப்பலாம். ஆனால், இதுவரை எவ்வித விளக்கமும் ஆளுநர் தரப்பில் இருந்து கேட்கப்படவில்லை.
இதனால் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு 36 நாட்கள் ஆகியும் ஒப்புதல் கிடைக்காத நிலையில் தான், இதுகுறித்து ஆளுநரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டிருப்பதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்திருந்தார். ஆனால், இதுவரையும் ஆளுநர் அலுவலகத்தில் இருந்து நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஒரு வாரத்துக்கு முன்பே நேரம் கேட்கப்பட்ட நிலையில், இன்னும் நேரம் ஒதுக்கப்படாதபோது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்திக்க நேரம் ஒதுக்கிருப்பதும், ஆளுநர் மீதான ஒரு அதிருப்தியை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாததற்கு முன்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தான் தொடர்ந்து ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க அரசு முயன்று வருவதாக கூறப்படுகிறது. எனவே, ஆளுநர் நேரம் ஒதுக்குவாரா அல்லது விரைவில் ஒப்புதல் அளிப்பாரா என்ற எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
-எம்.ரமேஷ்