மில்லர் - தெவாட்டியா அதிரடி ஆட்டத்தால் குஜராத் டைட்டன்ஸ் கடைசி ஓவரில் இலக்கை எட்டி த்ரில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2022 தொடரில் பிராபோர்னில் இன்று நடைபெற்ற 43-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரூ அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஓப்பனர்களாக இம்முறையும் கோலி- டு பிளசிஸ் இணை களமிறங்கியது. பிரதீப் சங்வான் வீசிய வேகப்பந்தில் விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சி அளித்தார் டு பிளசிஸ். விக்கெட் விழக்கூடாது என்ற நோக்கத்தில் கோலி ஒரு பக்கம் பொறுமையாக விளையாட, மறுபக்கம் கொஞ்சம் அதிரடி காட்டத் துவங்கினார் படிதர்.
அல்சாரி ஜோசம் வீசிய 5வது ஓவரில் பவுண்டரிகளை இருவரும் விளாச, ஸ்கோர் உயரத் துவங்கியது. அதன் பின் இருவரும் பொறுமையாகவே விளையாடிய போதிலும், பெர்குசன் மற்றும் ஜோசப் வீசிய 10 மற்றும் 11வது ஓவரில் இருவரும் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசி அசத்தினர். மிகவும் பொறுமையாக விளையாடி வந்த கோலி 45 பந்துகளில் அரைசதம் விளாசினார். மறுபக்கம் ராஜத் படிதாரும் பவுண்டரி விளாசிய படி 29 பந்துகளில் அரைசதம் கடந்தார். சாங்வன் பந்துவீச்சில் படிதர் அவுட்டாகி வெளியேற, அடுத்தபடியாக ஷமி பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி கோலியும் நடையைக் கட்டினார்.
சிக்ஸர், பவுண்டரிகளாக மேக்ஸ்வெல் விளாசத் துவங்கிய போது 33 ரன்கள் குவித்த நிலையில் பெவிலியனுக்கு திரும்பினார். அடுத்து வந்த மகிபால் லொம்ரோர் தன் பங்குக்கு இரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசிவிட்டு நடையைக் கட்ட, 20 ஓவர்கள் முடிவில் 170 ரன்களை குவித்தது ஆர்சிபி. 171 ரன்கள் இலக்கை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் களமிறங்கியது. குஜராத் அணியின் ஓப்பனர்களாக சஹாவும், சுப்மான் கில்லும் களமிறங்கினர். ஓவருக்கு 8 ரன்களுக்கு இணையாக இந்த் கூட்டணி ரன்களை விளாசியதால் ஆர்சிபி அணி திணறத் துவங்கியது.
சஹாவை ஹசரங்கா அவுட்டாக்கி வெளியேற்ற, சாய் சுதர்சனுடன் ஜோடி சேர்ந்தார் கில். ஷபாஷ் அகபது வீசிய 8 வது ஓவரில் பவுண்டரி விளாசிய கில், அடுத்து அவுட்டாகும் வாய்ப்பில் இருந்து தப்பினார். கில்லுக்கு சபாஷ் வீசிய பந்து “வைடு” பால் போலச் சென்று விக்கெட் கீப்பர் ராவத்திடம் தஞ்சம் புகுந்தது. பேட்டில் பட்டது உறுதியாக தெரியாததால் அரைமனதுடன் அம்பயரிடம் முறையிட்டார் ராவத். களத்தில் இருந்த அம்பயர் வீரேந்தர் ஷர்மா விரல்களை உயர்த்தி “அவுட்” கொடுக்க்க சும்பான் கில் அதிர்ச்சி அடைந்தார்.
மூன்றாவது அம்பயரிடம் சுப்மான் கில் முறையிட அவர்கள் அல்ட்ரா எட்ஜ் முறையில் ஆய்வு செய்ததில் பந்து பேட்டில் படவில்லை என்பது உறுதியானது. சுப்மான் கில் அவுட் இல்லை என்ற அறிவிப்புடன் அந்த் பந்தை நோ பாலாக அறிவித்தார் மூன்றாவது நடுவர். விக்கெட் கீப்பர் ஸ்டம்புகளுக்கு முன்னால் கையுறைகளை வைத்திருந்ததால் நோ பால் வழங்கப்படுவதாக அவர் அறிவித்தார். அவருக்கு கிடைத்த இந்த “லக்” வெகுநேரம் நீடிக்கவில்லை! அடுத்து சபாஷ் வீசிய பந்தில் எல்.பி.டபுள்யூ ஆகி நடையைக் கட்டினார் கில்.
அடுத்து 20 ரன்கள் எடுத்த நிலையில் சாய் சுதர்சனும் நடையைக் கட்ட, கேப்டன் ஹர்திக் பாண்டியா 3 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். தோல்வியை நோக்கி திரும்பிய குஜராத் அணிக்கு நம்பிக்கை ஒளியாக வந்து சேர்ந்தது டேவிட் மில்லர்-ராகுல் தெவாட்டியா கூட்டணி. 7 ஓவர்களில் 75 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களமிறக்கினர் இருவரும். சிராஜ், ஹசரங்கா, ஹசில்வுட் வீசிய ஓவர்களில் இருவரும் பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசி வான வேடிக்கை நிகழ்த்தினர். ஒருவர் வீசிய ஓவர்களை தவிர! அது ஹர்சல் படேல்!
இக்கட்டான தருணத்தில் மிகச் சிக்கனமாக வீசி குஜராத் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி அளித்தார் ஹர்சல். ஆனால், அவர் வீசிய 19வது ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி அசத்தினார் தெவாட்டியா. கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மிக எளிதாக பவுண்டரிகளாக விளாசி அசத்தியது மில்லர்-தெவாட்டியா கூட்டணி. 3 பந்துகளை மீதம் வைத்து இலக்கை எட்டி வெற்றியடைந்தது குஜராத். இதன்மூலம் 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் வலுவான நிலைக்கு முன்னேறி இருக்கிறது குஜராத்.