19 ஆண்டுகளுக்கு பின் குத்துச்சண்டை.. ஜேக் பாலை திடீரென கன்னத்தில் அறைந்த மைக் டைசன்!

மைக் டைசன் (58) தன்னை விட ஏறக்குறைய பாதி வயதே உள்ள ஜேக்பால் உடன் குத்துச்சண்டை போட்டியில் இன்று மோத தயாராகி இருந்தார். ஆனால் போட்டி துவங்குவதற்கு முன்பே திடீரென ஜேக் பாலின் கன்னத்தில் மைக் டைசன் அறைந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மைக் டைசன்
மைக் டைசன் முகநூல்
Published on

அமெரிக்காவைச் சேர்ந்த குத்துச்சண்டை ஜாம்பவான், மைக் டைசன். இவர் மோதும் போட்டியானது, உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளது. காரணம், ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு பின் குத்துச்சண்டை கோதாவுக்குள் அவர் இறங்கியுள்ளார். தற்போது 58 வயதாகும் அவர், தம்மைவிட ஏறக்குறைய பாதி வயதே உள்ள ஜேக் பாலை எதிர்கொள்கிறார். இதற்காக காண்போர் அதிசயக்கும் வகையில் தமது உடம்பை முறுக்கேற்றியுள்ளார் டைசன்.

கடைசியாக 2005- ஆம் ஆண்டு கெவின் மைக்ப்ரைட் (KEVIN MCBRIDE) உடன் மோதிய போட்டியில் தோல்வியடைந்து, தொழில்முறை குத்துச்சண்டை போட்டிக்கு விடைகொடுத்தார். இப்போது விட்டதை பிடிக்கும் வெற்றி வெறியுடன், களமிறங்குகிறார் டைசன். ஜூலை மாதமே நடந்திருக்க வேண்டிய இந்தப் போட்டி, மைக் டைசனின் உடல்நலக்குறைவு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.

இவருடன் மோதும் 27 வயதாகும் ஜேக் பால், யூ டியூபராக இருந்து பின்னர் குத்துச்சண்டை வீரராக மாறியவர். டைசன் தம் வாழ்நாளில் 88 வெற்றிகளை குவித்துள்ளார். தாம் களமிறங்கிய 58 தொழில்முறை போட்டிகளில் 50 போட்டிகளில் வென்று சாதித்தவர். ஜேக் பால் தாம் களமிறங்கிய 11 போட்டிகளில் பத்து போட்டிகளில் வென்றிருக்கிறார்.

இவர்கள் இருவரும் மோதும் இந்தப் போட்டியானது, 8 சுற்றுகளை கொண்டதாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு சுற்றும் 2 நிமிடங்களை கொண்டதாக இருக்குமென தெரிவிக்கப்பட்டது. டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள அர்லிங்டன் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டி, இந்திய நேரப்படி இன்று காலை ஒன்பதரை மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான், போட்டி துவங்குவதற்கு முந்தைய நாளான நேற்று (வியாழக்கிழமை) இரவு இருவரின் எடையும் சோதனை செய்யப்பட்டது. அப்போது டைசன் 228.4 பவுண்டுகளும், பால் 227.2 பவுண்டு எடையையும் கொண்டிருந்தனர். அப்போது நடந்த உரையாடலில்தான், அரங்கமே சற்று பதற்றத்தை சந்தித்தது.

காரணம் மேடையில், அப்பொழுது நடந்த சிறிய உரையாடலின்போது, மைக் டைசன் திடீரென ஜேக் பாலின் கன்னத்தில் அறைந்தார். இதனால், ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, பாதுகாப்பாளர்கள் இருவரையும் பிரித்தனர்.

அப்போது பதிலளித்த மைக் டைசன், “உரையாடல் நிறைவடைந்தது “ என்று தெரிவித்து மேடையிலிருந்து வெளியேறினார். இதற்கு பதிலளித்த ஜேக் பால், “அவர் அறைந்ததால் நான் எந்த வலியையும் உணரவில்லை.. அவர் கோபமாக இருக்கிறார். அவர் ஒரு கோபமான குட்டி தெய்வம்... அழகான அறை நண்பா..” என்று தெரிவித்தார்.

மைக் டைசன்
இந்தியாவில் மகளிர் டென்னிஸில் புரட்சியை ஏற்படுத்திய "Santina" - சானியா மிர்சா பிறந்தநாள் இன்று!

ஜேக் பால் பேசிய விதம்தான், மைக் டைசனை கோபப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், எதற்காக அறைந்தார் என்று அவர் கூறவில்லை. இந்த சம்பவம் நடப்பதற்கு ஒருவாரத்திற்கு முன்னதாக, மைக் டைசனிடம் ஜேக் பால் உடனான உறவு குறித்து கேட்டதற்கு, “இருவருக்கும் இடையில் எந்த உறவும் இல்லை” என்று தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com