உலகக் குத்துச்சண்டை சாம்பியனான மைக் டைசன் மீண்டும் பாலியல் புகாரில் சிக்கியுள்ளார்.
உலகக் குத்துச்சண்டையில் கடந்த 1985-2005 காலகட்டத்தில் சாம்பியனாக வலம் வந்தவர் மைக் டைசன். அமெரிக்க வீரரான இவர், அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கியவர். 1991ஆம் ஆண்டு, பாலியல் புகார் ஒன்றில் சிக்கி, மூன்று வருடங்கள் சிறையில் சிக்கி சிறை வாழ்க்கை அனுபவித்தார். பின்னர், மீண்டும் களம் புகுந்து எதிராளிகளை வேட்டையாடினார். கடந்த 2005ஆம் ஆண்டு தொழில்முறை குத்துச்சண்டைப் போட்டியிலிருந்து மைக் டைசன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பின்னர், 15 ஆண்டுகள் குத்துச்சண்டை உலகிலிருந்து விலகி இருந்த மைக் டைசன், கடந்த 2020ஆம் ஆண்டு மீண்டும் குத்துச்சண்டை போட்டியில் களமிறங்க இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்த நிலையில், மைக் டைசன் மீண்டும் பாலியல் புகாரில் ஒன்றில் தற்போது சிக்கியுள்ளார். நியூயார்க்கைச் சேர்ந்த பெண்ணொருவர் கொடுத்துள்ள பாலியல் புகாரில், டைசனுடன் காரில் இருந்தபோது அவர் தன்னைத் தாக்கி வன்புணர்வு செய்ததாகவும், அப்போது அவருடைய ஆடைகளை டைசன் வலுக்கட்டாயமாகக் கிழித்ததாகவும் அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் அதில், “டைசனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னுடைய கஷ்டங்களுக்கு இழப்பீடாக 5 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டும் அவர். அவரால் நான் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டைசனுக்கு எதிராக வழக்குப் பதியப்பட்டு உள்ளது. இதுகுறித்து மைக் டைசன் எந்தக் கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை.