இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நாளை அசாம் மாநிலம் கவுகாத்தியில் தொடங்குகிறது. அண்மையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி, இலங்கையை துவம்சம் செய்யும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.
2019 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது. வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடா்களை இழக்காமல் வெற்றிப் பெற்றது. இந்நிலையில் இந்தாண்டு டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. அதற்கு ஆயத்தமாகும் வகையில் இலங்கையுடனான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது.
இந்திய அணியை பொறுத்தவரை அனுபவம், இளமை, ஆக்ரோஷம் கொண்ட அணியாக இருக்கிறது. இந்திய அணியில் பேட்டிங், பந்துவீச்சு வலுவாக உள்ளது. இந்தத் டி20 தொடரில் ரோஹித் சா்மாவுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. அதேநேரம் அனுபவம் வாய்ந்த ஷிகா் தவான், காயத்தில் இருந்து குணமடைந்து மீண்டும் சோ்க்கப்பட்டுள்ளார். பேட்டிங்கில் ராகுல், தவான், கோலி, ஸ்ரேயாஸ் ஐயா், ரிஷப் பன்ட், ஆகியோர் சிறப்பாகவே விளையாடுகின்றனர். இந்திய அணியில் காயத்திலிருந்து மீண்ட பும்ரா சேர்ந்துள்ளார். இந்திய அணியின் பீல்டிங் மட்டும் கொஞ்சம் சொதப்பலாக உள்ளது.
இலங்கை அணியில் மலிங்கா, ஏஞ்சலோ மாத்யூஸ் தவிர மற்றவர்கள் எல்லோரும் இளம் வீரர்களே. இதில் குணதிலகா, குசால் பெரேரா, டிக்வெலா மட்டுமே ஓரளவுக்கு அனுபவம் வாய்ந்தவர்கள். அண்மையில் எநதவொரு டி20 போட்டிகளிலும் பெரிய வெற்றிகளை இலங்கை அணி குவிக்கவில்லை. இதனால், இந்தத் தொடரில் இந்திய அணியின் ஆதிக்கமே அதிகமிருக்கும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகிறார்கள்.