இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் நாரி காண்ட்ராக்டரின் தலையில் 1962-ஆம் ஆண்டு வேகப்பந்து வீச்சாளர் சார்லி கிரிஃப்ஃபித் வீசிய பவுன்சாரால் காயம் ஏற்பட்ட போது பொருத்தப்பட்ட உலோக தகடு 60 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றிகரமாக நீக்கப்பட்டது.
1962ஆம் ஆண்டில் இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது பார்போடாஸுக்கு எதிரான போட்டியின் போது வேகப்பந்து வீச்சாளர் சார்லி கிரிஃபித் வீசிய பந்தால் நாரி காண்ட்ராக்டர் காயமடைந்தார். இது அவரது சர்வதேச கிரிக்கெட் பயணத்திற்கு முடிவாக அமைந்தது. அதன் பின்னர் அவருக்கு வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் அப்போது புகழ்பெற்ற மருத்துவரான சண்டி என்பவர் டைட்டேனியம் தகட்டை பொருத்தினார்.
இதன் பின்னர் அவர் தனது காயத்திலிருந்து மீண்டு குஜராத் அணிக்காக 1962ஆம் ஆண்டு முதல் 1970-71ஆம் ஆண்டு வரை விளையாடினார் நாரி காண்ட்ராக்டர். தற்போது 60 ஆண்டுகளுக்கு பிறகு மருத்துவர்களின் பரிந்துரைப்படி அவரது தலையில் வைக்கப்பட்ட தகடு மும்பை மருத்துவமனையில் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் நீக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் நலமாக இருப்பதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.