வரி ஏய்ப்பு வழக்கில் கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு விதிக்கப்பட்ட 21 மாத சிறைத்தண்டனையை ஸ்பெயின் உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.
ஸ்பெயினின் பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வரும் மெஸ்ஸி 2007-ஆம் ஆண்டு தொடங்கி 2009-ஆம் ஆண்டு வரை, ஸ்பெயின் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் இந்திய மதிப்பில் சுமார் 30 கோடி ரூபாய் வரை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தமது தந்தை ஜார்ஜ் ஹொரசியாவுடன் சேர்ந்து இங்கிலாந்து, உருகுவே உள்ளிட்ட சில நாடுகளில் போலியாக நிறுவனங்களை தொடங்கியதற்கான ஆதாரங்களும் சமர்பிக்கப்பட்டன. இந்த வழக்கில் மெஸ்ஸி-க்கும், அவரது தந்தைக்கும் தலா 21 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து பார்சிலோனா நீதிமன்றம் ஏற்கனவே தீர்பளித்திருந்தது.
இதனை எதிர்த்து ஸ்பெயின் உச்சநீதிமன்றத்தில் மெஸ்ஸி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. மெஸ்ஸிக்கு விதிக்கப்பட்ட 21 மாதங்கள் சிறைத்தண்டனையையும், இந்திய மதிப்பில் சுமார் 15 கோடி ரூபாய் அபராதத்தையும் உறுதிசெய்து ஸ்பெயின் உச்சநீதிமன்றம் தீர்பளித்தது. மெஸ்ஸியின் தந்தைக்கு விதிக்கப்பட்ட 21 மாத சிறைத்தண்டனையை 15 மாதங்களாகவும் நீதிமன்றம் குறைத்தது.