FIFA-வின் அடுத்த கால்பந்து உலகக் கோப்பை தொடரானது எதிர்வரும் 2026-ம் ஆண்டு கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்கா முதலிய நாடுகளால் நடத்தப்படவிருக்கிறது. 2026 கால்பந்து உலகக்கோப்பை போட்டிகளானது ஜூன் 11 முதல் தொடங்கி ஜூலை 19 வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2026 உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள் அக்டோபர் 11 முதல் நடைபெற்றுவருகிறது. இதில் சமீபத்திய தகுதிச்சுற்று போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா மற்றும் பொலிவியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
அர்ஜென்டினாவின் தலைநகரில் பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்குள் கம்பேக் கொடுத்த மெஸ்ஸி, ஹாட்ரிக் கோல்கள் அடித்து வரலாறு படைத்தார். ஹாட்ரிக் கோல்கள் அடித்தது மட்டுமில்லாமல் மேலும் 2 கோல்கள் அடிப்பதற்கும் வழிவகை செய்தார். மெஸ்ஸியின் அபாரமான ஆட்டத்தால் 6-0 என பொலிவியாவை வீழ்த்தி அர்ஜென்டினா அபார வெற்றிபெற்றது.
சர்வதேச கால்பந்து போட்டிகளில் 10வது முறையாக ஹாட்ரிக் கோல்கள் அடித்த லியோனல் மெஸ்ஸி, ரொனால்டோவின் (10) ஹார்ட்ரிக் உலக சாதனையை சமன்செய்து அசத்தினார். இந்த மூன்று கோல்கள் மூலம் சர்வதேச கோல்களின் எண்ணிக்கையை 112ஆக உயர்த்திய மெஸ்ஸி, அதிக கோல்கள் அடித்த ரொனால்டோவிற்கு (133) பிறகு இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.
சொந்த மக்கள் முன்னிலையில் ஹாட்ரிக் கோலடித்த மெஸ்ஸிக்கு மிகப்பெரிய ஆரவாரத்தை எழுப்பிய ரசிகர்கள், மெஸ்ஸி என்ற பெயரை அரங்கம் முழுவதும் அதிரவிட்டனர்.
போட்டியின் கடைசிநேரத்தில் தன்னுடைய மூன்றாவது கோலடித்த மெஸ்ஸி மிகப்பெரிய கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். வெற்றிக்கு பிறகு பேசிய தலைசிறந்த வீரர்களில் ஒருவரான அர்ஜென்டினா மேஸ்ட்ரோ தனது விளையாடும் நாட்கள் நெருங்கிவிட்டதாக ஒப்புக்கொண்டார்.
ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது குறித்து பேசிய மெஸ்ஸி, “அர்ஜென்டினா ரசிகர்களின் பாசத்தை உணர்ந்து விளையாடுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் என் பெயரை எப்படிக் கத்துகிறார்கள் என்பதைக் கேட்பது என்னை அதிகப்படியாக உணர்ச்சிவசப்பட வைக்கிறது. ரசிகர்களுடனான இந்த தொடர்பை நாங்கள் அனைவரும் விரும்புகிறோம், மேலும் இப்படியான ரசிகர்கள் முன் சொந்த மண்ணில் விளையாடுவது மகிழ்ச்சியை தருகிறது" என்று தன்னுடைய கொண்டாட்டத்தின் மனநிலையை வெளிப்படுத்தினார்.
அப்போது பேசிய தொகுப்பாளர், “நீங்கள் இந்த ஜெர்சியில் விளையாடும்போது, உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் உங்களை நேசிக்கிறார்கள். 2026 உலகக் கோப்பை வரை இருங்கள்” என்று மெஸ்ஸியின் ரசிகராக தன்னுடைய உணர்வை வெளிப்படுத்தினார்.
அப்போது ஓய்வு குறித்து பேசிய அவர், “எனது எதிர்காலம் குறித்து நான் எந்த தேதியையும் அல்லது காலக்கெடுவையும் அமைக்கவில்லை. என்னை சுற்றி கிடைக்கும் அன்பு அனைத்தையும் நான் ரசிக்கிறேன். முன்னெப்போதையும் விட அதிகப்படியான உணர்வுடன் மக்களிடம் இருந்து எல்லா அன்பையும் பெறுகிறேன். ஆனால் எனக்கு தெரியும் இது என்னுடைய கடைசி (அர்ஜென்டினா கூட்டத்திற்கு முன்னால்) ஒன்றாக இருக்கலாம்” என்று அவர் முடித்தார்.
மெஸ்ஸி தனித்து எதையும் குறிப்பிட்டு கூறவில்லை, மெஸ்ஸியின் இந்த கூற்றை பலர் 2026 உலகக்கோப்பையில் கடைசியாக விளையாடவிருப்பதை தான் அவர் அப்படி கூறியிருக்கிறார் என்றும், இல்லை அவர் 2026 உலகக்கோப்பைக்கு முன்பே ஓய்வை பெறுவார் என்றும் கருத்திட்டு வருகின்றனர். ஆனால் முன்னாள் வீரர்கள் மெஸ்ஸி 2026 உலகக்கோப்பையில் விளையாடுவார் என்று கூறியுள்ளனர்.
என்ன முடிவை மெஸ்ஸி எடுக்கப்போகிறார் என்பதை தாண்டி, 37 வயதாகும் மெஸ்ஸி தன்னுடைய கால்பந்து வாழ்க்கையின் கடைசிகட்டத்தில் இருக்கிறார் என்பதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஒருவேளை மெஸ்ஸி 2026 உலகக்கோப்பையில் விளையாடினால், அது அவருக்கான ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களுக்கும் கொண்டாட்டமான விசயமாகவே அமையும்..