இந்தியாவை கதறவிட்ட மெஹிதி ஹசன்! 9 விக்கெட்டை இழந்த நிலையிலும் அபார வெற்றி!

இந்தியாவை கதறவிட்ட மெஹிதி ஹசன்! 9 விக்கெட்டை இழந்த நிலையிலும் அபார வெற்றி!
இந்தியாவை கதறவிட்ட மெஹிதி ஹசன்! 9 விக்கெட்டை இழந்த நிலையிலும் அபார வெற்றி!
Published on

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது வங்கதேச அணி.

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடவிருக்கிறது. இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஷேர் பங்களா தேசிய மைதானம், டாக்காவில் இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது.

முதலில் ஆடிய இந்திய அணி வங்கதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 41.2 ஓவர்கள் முடிவில் 186 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக பந்துவீசிய வங்கதேச அணியின் பந்துவீச்சாளர்கள் ஷாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகள் மற்றும் எபடோட் ஹொசைன் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினர். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் இந்திய அணியில் அதிகபட்சமாக 5 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் விளாசி 73 ரன்கள் எடுத்தார்.

187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துறத்திய வங்கதேச அணிக்கு முதல் ஓவரிலேயே ஓப்பனர் ஷாண்டோவை டக்அவுட்டாக்கி வெளியேற்றினார், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர். தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியின் சிராஜ் அனமுல், விக்கெட்டை வீழ்த்த 26 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை எடுத்தார். இதனால் விக்கெட்களை தடுமாறியது வங்கதேச அணி. பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் லிட்டன் தாஸ் மற்றும் ஷாகிப் அல் ஹசன் இருவரும் ,சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 3 பவுண்டரிகள், 1 சிக்சர் என விளாசி நல்ல தொடக்கத்தை கொடுத்த லிட்டன் தாஸை வெளியேற்றினார் வாசிங்டன் சுந்தர்.

பின்னர் 24ஆவது ஓவரை வாசிங்டன் சுந்தர் வீச, அதை எதிர்கொண்டு விளையாடிய வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசன் ஃபார்வர்டு பீல்டில் இருந்த விராட் கோலியை தாண்டி தூக்கி அடிக்க முயற்சி செய்து அடித்தார். வேகமாக வந்த பந்தை தாவி ஒரே கையில் பிடித்து வெளியேற்றினார் விராட் கோலி. பின்னர் அடுத்தடுத்த வந்த வீரர்கள் தடுமாற விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர். இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத வங்கதேச அணி 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது.

கடைசி வரை இந்தியாவை கதறவிட்ட மெஹிடி ஹசன்!

என்ன தான் 9 விக்கெட்டுகளை இழந்தாலும் ஒருபுறம் நிலைத்து நின்ற மெஹிடி, இருக்கும் ஒரு விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் சிக்சர்கள், பவுண்டரிகள் என விளாசி இந்திய அணிக்கு இடிமேல் இடியை இறக்கினார். தொடர்ந்து வங்கதேச ரசிகர்களின் ஆதரவு குரல்கள் அதிகரிக்க அனைத்து விதமான திறமைகளையும் வெளிப்படுத்திய மெஹிடி அதிரடியை வெளிப்படுத்த, அவரது விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் தடுமாறிய இந்திய அணி பந்துவீச்சாளர்கள், தொடர்ந்து நோ-பால், மிஸ் பில்ட், கேட்ச் என அனைத்து வாய்ப்புகளையும் கோட்டைவிட 9 விக்கெட்டுகளை இழந்த நிலையிலும் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது வங்கதேச அணி.

விக்கெட் கீப்பரே கேட்சை விட்டது முக்கியமான திருப்புமுனையாக மாறியது!

43ஆவது ஓவரில் 4ஆவது பந்தை ஷர்துல் தாஹூர் வீச, அதை மெஹிடி ஹசன் அடிக்க அந்த பந்து விக்கெட் கீப்பருக்கு மேலாக காற்றில் பறந்தது. சரியாக பந்துக்கு அடியில் சென்ற விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் கேட்சை பிடிக்காமல் தவறவிட்டார். அனைததையும் சரியாக செய்த ராகுல் கேட்சை கோட்டைவிட்டது எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேட்சை தவறவிட்ட ராகுல் போட்டியையும் தவறவிட்டார்.

கடைசி விக்கெட்டுக்கு மட்டும் 51 ரன்கள்!

136 க்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையிலும் வங்கதேச அணியின் மெஹிடி ஹசன் மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் இருவரும் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் கடைசி வரை நிலைத்து நின்று அபாரமான வெற்றியை பதிவு செய்தனர்.

இந்தியா 105- வங்கதேசம் 58ஆல்அவுட் போட்டியை திரும்பவும் கொண்டுவந்த இரு அணிகள்!

2014ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு சென்று ஆடிய இந்திய அணி 2ஆவது ஒருநாள் போட்டியில் வங்கதேசத்தின் நட்சத்திர பந்துவீச்சாளர் டஸ்கின் அகமது பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 105 ரன்களில் சுருண்டது.

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி ஸ்டார்ட் பின்னியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 58 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வெற்றிபெற வேண்டிய போட்டியில் படுதோல்வியை சந்தித்தது. 4 ரன்களை விட்டுக்கொடுத்த பின்னி 6 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்திருந்தார்.

இந்நிலையில் அந்த போட்டியை திரும்பவும் இந்திய அணி கொண்டுவரும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்துள்ளது இந்திய அணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com