ரஷ்யாவில் 21 ஆவது பிஃபா கால்பந்தாட்டப் போட்டிகள் எனும் கொண்டாட்டம் ஒரு வழியாக முடிவடைந்தது. இந்த உலகக் கோப்பையை பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி கைபற்றியது. ஜூன் 14 ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பையில் உலகப் புகழ்பெற்ற வீரர்கள் லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் ஆகியோர் விரைவில் போட்டியில் இருந்து வெளியேறிவிட்டனர்.
இந்த உலகக் கோப்பையில் பெருமைமிகு கோல்டன் பூட் விருது இங்கிலாந்தின் ஹாரி கேனுக்கு வழங்கப்பட்டது. இதற்கடுத்தப்படியாக கோல்டன் பால் விருதை குரோஷியாவின் லூகா மோட்ரிச்க்கும், கோல்டன் கிளவ் விருது பெல்ஜியம் கோல் கீப்பர் திபவ்ட் கோர்டோய்ஸ்-க்கும் வழங்கப்பட்டது. இந்நிலையில் உலகக் கோப்பையில் சிறந்த இளம் வீரருக்கான விருதை பிரான்ஸ் அணியின் பாப்பேவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
18 வயதேயான பிரான்ஸின் பாப்பே, இந்த உலகக் கோப்பையில் பிரான்ஸ் வெற்றிப் பெறுவதற்கு ஒரு தூணாக களத்தில் செயல்பட்டார். உலகக் கோப்பை தொடரில் விளையாடுகின்ற இளம் வீரர்களில் சிறந்த வீரர்களை தேர்வு செய்யும் முறை 1958 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் விருதுகள் எதுவும் வழங்கப்படவில்லை. 2006 ஆம் ஆண்டு ஜெர்மனியில் இடம் பெற்ற உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக சிறந்த இளம் வீரருக்கான விருது வழங்கப்பட்டது.
முதலாவது விருதை ஜெர்மனி அணியின் லூகாஸ் பொடோல்ஸ்கி பெற்றிருந்தார். அப்போது அவருக்கு வயது 21. மேலும் 2010 ஆம் ஆண்டு 20 வயது நிரம்பிய ஜெர்மனியின் தாமஸ் முல்லர் பெற்றிருந்ததோடு 2014 ஆம் ஆண்டு பிரான்ஸ் அணியின் போல் பொக்பா தனது 21 ஆவது வயதில் வென்றிருந்தார்.
1997 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் தேதி அல்லது அதன் பின்னர் பிறந்த வீரர்கள் 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த இளம் வீரர் விருதுக்காக தகுதி பெறுகின்றனர். அதன்படி பல்வேறு தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு பின் பிரான்ஸின் பாப்பேவுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.