ஐபிஎல் தொடரில் இருந்து பெங்களூரு அணி வெளியேறியதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிரப்படும் வெறுப்புணர்வுமிக்க பதிவுகள் வேதனையை ஏற்படுத்துவதாக ஆர்சிபி வீரர் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
நேற்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தாவிடம் போராடி தோற்றது ஆர்சிபி. கோலி தலைமையிலான அணியின் கடைசி போட்டி என்பதால் வெற்றியை எதிர்நோக்கி இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இருப்பினும், 'ஜெயிக்கிறோமோ தோக்குறோமோ சண்ட செய்யணும்' என்பதற்கு ஏற்ப சண்டை செய்தார் கோலி. அவரின் அந்த போராட்டத்தை பலரும் வியந்து பாராட்டினர். ஆனால் சிலர் விளையாட்டையும் கடந்து வெறுப்பை விதைத்து வருகின்றன.
இது குறித்து இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மேக்ஸ்வெல்,''ஆர்சிபியின் சிறந்த சீசன் இது. துரதிஷ்டவசமாக நாங்கள் இருக்க வேண்டிய இடத்திலிருந்து பின்தங்கிவிட்டோம். சமூக ஊடகங்களில் வலம் வரும் குப்பைகள் முற்றிலும் அருவறுப்பானவை. ஒவ்வொரு நாளும் சிறந்ததை வெளிபடுத்தும் மனிதர்கள் தான் நாம். வெறுப்பை பரப்புவதற்கு பதிலாக ஒழுக்கமான நபராக இருக்க முயற்சி செய்யுங்கள். வீரர்கள் மீதான தங்களின் அன்பையும், பாராட்டையும் வெளிப்படுத்திய உண்மையான ரசிகர்களுக்கு நன்றி. துரதிஷ்டவசமாக சமூக ஊடகங்களை வெறுப்பை விதைக்கும் தளமாக சிலர் மாற்ற முயற்சிக்கிறார்கள். அதை ஏற்க முடியாது. தயவு செய்து அவர்களைப்போல இருக்காதீர்கள்'' என்று பதிவிட்டுள்ளார்.