இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் அணியில் இருந்து மேத்யூஸ் நீக்கப்பட்டுள்ளதற்கு அவர் விக்கெட்டுக்கு இடையில் சரியாக ஓடவில்லை என்பது காரணமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
இலங்கை கிரிக்கெட் அணி சமீபகாலமாக கடும் தோல்விகளை சந்தித்து வருகிறது. அந்த அணி ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றிலேயே வெளியேறியது. இது கடும் விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து அந்த அணியின் கேப்டன் மேத்யூஸ் நீக்கப்பட்டு, டெஸ்ட் கேப்டன் சண்டிமால் ஒரு நாள் போட்டிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட இருக்கிறது. முதலில் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கி றது. இந்த தொடர் அடுத்த மாதம் 10-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான இலங்கை ஒரு நாள் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் மேத்யூஸ் பெயர் இடம்பெறவில்லை.
ஒரு வருடத்துக்குப் பிறகு ஆசியக் கோப்பைப் போட்டியில் சேர்க்கப் பட்டிருந்த மலிங்கா அங்கு சிறப்பாக செயல்பட்டதால் இதில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
மேத்யூஸ் நீக்கப்பட்டதற்கான காரணமாக அவர் விக்கெட்டுக்கு இடையில் சரியாக ஓடுவதில்லை என்றும் இதனால் அவர் அடிக்கடி ரன் அவுட் ஆகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிகமாக ரன் அவுட் ஆன வீரர் என்ற ரெக்கார்டையும் அவர் வைத்திருக்கிறாராம். இதனால் பிட்னஸ் தேர்வில் வெற்றி பெற்று மீண்டும் அணியில் இடம்பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.