இங்கிலாந்து ஆஸ்திரேலியா ஆஷஸ் போட்டியோடு தோனியை ஒப்பிட்டு வம்பிழுத்த கேகேஆர் அணியை ட்ரோல் செய்து சிஎஸ்கே ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர்.
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 4 ஆவது போட்டியை இங்கிலாந்து அணி போராடி டிரா செய்தது. சிட்னியில் நடைபெற்ற இப்போட்டியில் 10 விக்கெட்டுகளுடன் கடைசி நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி தொடர்ந்தது. இந்தப் போட்டியின் கடைசி சில நிமிடங்கள் மிகவும் சுவாரஸ்யமாக அமைந்துவிட்டது.
ஒரு டி20 போட்டிக்கான பரபரப்பு அப்போது நிலவியது. 9 விக்கெட்டுகளை இழந்துவிட்ட இங்கிலாந்து அணி எப்படியாவது கடைசி விக்கெட்டை இழக்காமல் இருக்க போராடியது. ஆட்டத்தில் அனல் பறந்த கடைசி 12 பந்துகளை பிராட் மற்றும் ஆண்டர்சன் திறம்பட எதிர்கொண்டு ஆட்டத்தை டிரா செய்தனர்.
இந்தப் போட்டி முடிவடைந்த பின்னர் ஆஸ்திரேலிய வீரர்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்யும்போது சூழ்ந்து நிற்கும் போட்டோ வைரல் ஆனது. இந்தப் போட்டோவைத்தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தோனியை ட்ரோல் செய்துள்ளது. தோனி புனே அணிக்காக விளையாடிக் கொண்டிருந்த போது, கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்யும் போட்டோவை இங்கிலாந்து பேட்ஸ்மேன் நிற்கும் போட்டோவுடன் இணைத்து பதிவிட்டுள்ளனர்.
அந்தப் போட்டியிலும் தோனியை சுற்றிலும் கொல்கத்தா அணி வீரர்கள் சூழ்ந்து நிற்பார்கள். ஆனால், இறுதி வரை தோனியை ஆட்டமிழக்க செய்யவே முடியாது. 22 பந்துகளை சந்தித்து தோனி வெறும் 6 ரன்களைத்தான் எடுத்திருப்பார். அந்த புகைப்படத்தை சேர்த்துதான் 'டெஸ்ட் போட்டியில் நிகழ்ந்துள்ள இந்த கிளாசிக் மூவ் உங்களுக்கு டி20யில் நிகழ்ந்த மாஸ்டர் ஸ்டோக்கை ஞாபகப்படுத்தும்' என்று குறிப்பிட்டிருந்தனர்.
கே.கே.ஆர் ட்விட்டர் பதிவை பார்த்த தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் கொந்தளித்துவிட்டனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ட்ரோல் செய்து வருகிறார்கள். கொல்கத்தா அணிக்கு எதிராக தோனியின் சாதனைகளை ரசிகர்கள் பட்டியலிட்டு வருகிறார்கள். ஒரு லெஜண்டரி பேட்ஸ்மேனை இப்படியா கிண்டல் செய்வது எனவும் சிலர் கமண்ட் செய்துள்ளனர்.