ஹாட் ஸ்பாட் கேமராவை கையாண்டு கொண்டிருந்த ஒரு சிறுவன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆஷஸ் ஹீரோவாக மாறி இருக்கிறார்.
ஒவ்வொரு வீரரும் களத்தில் சாதித்த பிறகு தான் அவர்கள் கடந்து வந்த பாதையை உலகம் உற்று நோக்குகிறது. அந்தப் பட்டியலில் அண்மையில் இணைந்தவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளம் கிரிக்கெட்வீரர் மார்னஸ் லாபுசானே. ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், மாற்று வீரராக களமிறங்கிய இவர், நெருக்கடியான சூழலில் அரைசதம் கடந்து ஆஸ்திரேலிய அணியை தோல்வியிலிருந்து மீட்டார்.
25 வயதான இவர், அறிமுக ஆஷஸ் போட்டியிலேயே அணிக்காக போராடி, ரசிகர்கள் கொண்டாடும் நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்கு விளையாட வேண்டும் என்ற கனவோடு மார்னஸ் லாபுசானே இருந்த காலத்தில், இவருக்கும் ஒரு ஆஷஸ் தொடருக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தியது கேமரா தான்.
2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இவர், நடுவரின் முடிவை மறுபரீசிலனை செய்ய உதவும் உபகரணங்களில் ஒன்றான ஹாட் ஸ்பாட் கேமராவை கையாண்டு இருக்கிறார். Brisbane இல் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், பீட்டர் சிடில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய போது இவரது ஹாட் ஸ்பார்ட் கேமராவின் நகர்வுகளே நடுவரின் முடிவுக்கு உதவியாக இருந்தன.
இது குறித்து பேசியுள்ள மார்னஸ் லாபுசானே, 90 டாலர் ஊதியத்திற்காக ஹாட் ஸ்பாட் கேமரா இயக்கினேன். தற்போது ஆஸ்திரேலிய ஆஷஸ் அணியில் இடம்பிடித்திருக்கிறேன். இதை நினைத்தால் அற்புதமான உணர்வை தருகிறது என தெரிவித்துள்ளார்.