காயம் காரணமாக விலகிய இங்கிலாந்து பவுலர் - லக்னோ அணிக்கு புதிய சிக்கல்!

காயம் காரணமாக விலகிய இங்கிலாந்து பவுலர் - லக்னோ அணிக்கு புதிய சிக்கல்!
காயம் காரணமாக விலகிய இங்கிலாந்து பவுலர் - லக்னோ அணிக்கு புதிய சிக்கல்!
Published on

ஐபிஎல் போட்டி துவங்க இன்னும் ஒரு வாரமே உள்ளநிலையில், காயம் காரணமாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியுள்ளது, லக்னோ அணிக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

2022-ம் ஆண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் போட்டி, வருகிற மார்ச் 26-ம் தேதி மகாராஷ்டிராவில் துவங்க உள்ளது. இந்த வருடம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டு, மொத்தம் 10 அணிகள் களமிறங்குகின்றன. இதற்கான அட்டவணைகளை அண்மையில் பிசிசிஐ வெளியிட்டு இருந்தது. அதன்படி, 10 அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அணியும் 14 சூப்பர் லீக் போட்டிகளில் விளையாட உள்ளன.

ஐபிஎல் போட்டி துவங்க இன்னும் ஒரு வாரமே உள்ளநிலையில், ஒவ்வொரு அணியும் நாளுக்கு ஒரு அப்டேட் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், ஐபிஎல் ஏலத்தில் 7.5 கோடி ரூபாய்க்கு லக்னோ அணி சார்பில் எடுக்கப்பட்ட இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ள மார்க் வுட், அங்கு கடந்த வாரம் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அப்போது 3-ம் நாள் ஆட்டத்தில் அவருக்கு வலது முழங்கையில் காயம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அன்றைய தினம் 6 ஓவர்கள்வரை மட்டும் வீசிவிட்டு, பெவிலியன் திரும்பினார். இதையடுத்து 5-வது நாள் ஆட்டம் துவங்குவதற்கு முன்பு உடற்தகுதி சோதனை நடப்பட்டது. அப்போது ஒரு ஓவரில் இரண்டு பந்துகள் மட்டும் வீசிய நிலையில், கையில் மீண்டும் வலி ஏற்பட ஆரம்பித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்த டெஸ்ட் தொடரிலிருந்து மார்க் வுட் விலகினார். இந்நிலையில் ஐபிஎல் 15-வது சீசனிலிருந்து விலகுவதாக மார்க் வுட் அறிவித்துள்ளார். ஆடும் லெவனில் மார்க் வுட் சேர்க்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில், அவர் தற்போது விலகியுள்ளதால் அவருக்கு பதில் புதிதாக யாரையாவது லக்னோ அணி சேர்க்க வேண்டும்.

மேலும் ஐபிஎல் நெருங்கியுள்ள நிலையில், பயோ பபுள் காரணமாக புதிய வீரரை தேர்ந்தெடுத்து, அணிக்குள் சேர்ப்பது என்பது லக்னோ அணிக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏற்கனவே அணியில் உள்ள மற்றொரு வீரர் அவருக்கு பதில் களமிறக்கப்படலாம் என கூறப்படுகிறது. லக்னோ அணியின் கேப்டனாக கே.எல். ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். அணியின் ஆலோசகராக கௌதம் கம்பீர் உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com