ரஷ்ய வீராங்கனை மரிய ஷரபோவா டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பல தடைகளை உடைத்தெறிந்து சாதனை படைத்த அவரின் பயணத்தை சற்றே தெரிந்துக்கொள்ளலாம்.
சர்வதேச டென்னிஸ் களத்தில், தனது 14 ஆவது பிறந்த நாளில் காலடி எடுத்து வைத்த இவர், 18 வருடங்கள் மெச்சத்தகுந்த ஆட்டத்தால் ரசிகர்களை மகிழ்வித்து இருக்கிறார். கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், உலகமே வியக்கும் வகையில் பட்டம் வென்று அசத்தினார் ஷரபோவா. அப்போது பதினேழே வயதான இளம் ஷரபோவா, இறுதிப்போட்டியில் அனுபவ வீராங்கனை செரினா வில்லியம்ஸை வீழ்த்தி சாம்பியன் ஆனார்.
குறைந்த காலத்தில் முன்னணி வீராங்கனையாக உருவெடுத்த இவர், 5 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வசப்படுத்தி இருக்கிறார். டென்னிஸில் உயரிய அங்கீகாரமாக கருதப்படும் நான்கு கிராண்ட் ஸ்லாம் தொடர்களிலும், பட்டம் வென்ற வீராங்கனை என்ற பெருமையை தன்னகத்தே கொண்டுள்ளார் ஷரபோவா. கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக்கில், வெள்ளிப் பதக்கம் வென்று தாயகத்திற்கு பெருமை சேர்த்தார் ஷரபோவா. ஏறுமுகமாக இருந்த இவரது டென்னிஸ் வாழ்க்கையில் தோள் பட்டை காயங்களும், ஊக்க மருந்து உட்கொண்டதால் விதிக்கப்பட்ட தடையும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தின.
கடந்த 2016 ஆம் ஆண்டு, அப்போது புதியதாக தடை செய்யப்பட்டிருந்த மெல்டோனியம் என்ற ஊக்க மருந்தை ஷரபோவா உட்கொண்டது கண்டறியப்பட்டது. அதற்கான இவருக்கு இரண்டு ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அப்பீல் செய்த ஷரபோவா, 15 மாதங்களுக்குப் பிறகு டென்னிஸ் களத்திற்கு மீண்டும் திரும்பினார். அதன் பின்னர் அவர் விளையாடிய கிராண்ட் ஸ்லாம்களில் ஒன்றில் கூட பட்டம் வெல்லவில்லை. பெருந்தொடர்களை தவிர, 73 போட்டிகளில் விளையாடிய ஷரபோவா 45ல் மட்டுமே வெற்றி பெற்றார். அண்மையில் களம் கண்ட ஆஸ்திரேலிய ஓபனிலும் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார். இந்நிலையில், தற்போது 373 இடத்தில் உள்ள ஷரபோவா, டென்னிஸில் இருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார்.
ஷரபோவாவின் தனித்துவமான ஆட்டத்திறனும், போட்டிகளை வென்ற பிறகு அவர் ரசிகர்களை நோக்கி முத்தங்களைப் பறக்க விட்டு மகிழ்ந்த தருணங்களும் ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்.