நேற்று காவலாளி.. இன்று பஞ்சாப் அணியின் கிரிக்கெட் வீரர்..!

நேற்று காவலாளி.. இன்று பஞ்சாப் அணியின் கிரிக்கெட் வீரர்..!
நேற்று காவலாளி.. இன்று பஞ்சாப் அணியின் கிரிக்கெட் வீரர்..!
Published on

நடப்பு ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் முன்னணி வீரர்கள் பலர் ஏலம் போகாத நிலையில் தினசரி 60 ரூபாய் கூலிக்கு வேலை பார்த்த ஜம்மு வீரர் மன்சூர் தர்ரை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

நடப்பு ஐபிஎல் போட்டிக்கான ஏலம் சில நாட்களுக்கு பெங்களூருவில் நடைப்பெற்றது. இந்த ஏலத்தில் முன்னணி வீரர்கள் பலர் ஏலம் போகவில்லை. அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்லை எடுக்க யாருமே ஆர்வம் காட்டவில்லை. இறுதியில் பஞ்சாப் அணி அவரை எடுத்தது. ஐபிஎல் ஏலம் இப்படி இருக்க, இதில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம்வீரர் ஒருவரை பஞ்சாப் அணி 20 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது. ஐபிஎல் ஏலத்தில் 20 லட்சம் என்பது பெரிய தொகை இல்லை என்றாலும், ஒரு உள்ளூர் வீரர் தனது திறமை நிரூபிக்க ஐபிஎல் சிறந்த களம் தான். இவரது சிறப்பே அதிவேக சிக்ஸர் தான்.

யார் அந்த வீரர்?

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோனாவரி கிராமத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் மன்சூர் தர். உள்ளூர் கிளப் போட்டிகள் மற்றும் சையத் முஸ்தா அலி டி20 டிராபி போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதால் இவரை பஞ்சாப் அணி தேர்வு செய்துள்ளது. இதுகுறித்து மன்சூர் கூறுகையில்,  “இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த இறைவனுக்கும், பஞ்சாப் அணிக்காக என்னை ஏலம் எடுத்த பிரித்தி ஜிந்தாவுக்கும் நன்றி. எனது வாழ்க்கை முழுவதும் போராட்டம் நிறைந்ததாகும். தற்போது நான் ஒரு அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். ஒரு காலத்தில் எனது கிராமத்தில் தினசரி 60 ரூபாய் கூலிக்கு வேலைக்கு சென்றேன். பஞ்சாப் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட செய்தியை எனது தாயிடம் கூறிய போது சுமார் 30,000 பேர் எனது வீட்டுக்கு வந்து வாழ்த்து தெரிவித்ததாக அவர் கூறினார். மக்களின் அன்பு மகிழ்ச்சி அளிக்கிறது.

2008 முதல் 2012 வரையிலான காலகட்டங்களில் ஒரு தனியார் நிறுவனத்தில் இரவு காவலாளியாக பணியாற்றி வந்தேன். இரவில் பணி காலையில் கிளப் போட்டிகளில் பங்கேற்று கிரிக்கெட் விளையாடுவது என காலத்தை கழித்தேன். முதல் முறையாக கிளப் போட்டிகளில் விளையாடிய போது ஷூ உள்ளிட்ட எந்த விளையாட்டு உபகரணங்களும் என்னிடம் இல்லை.

எனக்கு பிடித்தமான வீரர் யுவராஜ் சிங். அவருடன் இணைந்து விளையாடுவது மிகப்பெரிய விஷயம். கபில்தேவ், தோனி போன்று விளையாட விரும்புகிறேன். நான் எப்போதும் தோனி போன்று சிக்ஸர் அடிக்க விரும்புவேன்.

இன்றைய நவீன உலகில் 20 லட்சம் என்பது பெரிய தொகை இல்லை. ஆனால் சிறப்பான வாழ்க்கைக்கு தொடக்கமாக இதனை கருதுகிறேன். 3 வருடங்களுக்கு முன்பு வீடு கட்டினேன். ஆனால் இதுவரை அதற்கு ஜன்னல் மற்றும் கதவுகள் இல்லை. இந்தத் தொகையை கொண்டு அதனை சரி செய்வேன் .எனது தாயின் சிகிச்சைக்கு இந்தப் பணத்தை செலவு செய்வேன்” என்றார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com