"மன்கட்" ரன்அவுட் : அஸ்வினுக்கும் புதுசில்லை, பட்லருக்கும் புதுசில்லை !

"மன்கட்" ரன்அவுட் : அஸ்வினுக்கும் புதுசில்லை, பட்லருக்கும் புதுசில்லை !

"மன்கட்" ரன்அவுட் : அஸ்வினுக்கும் புதுசில்லை, பட்லருக்கும் புதுசில்லை !
Published on

இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #MankadAshwin என்ற ஹாஷ்டாக் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையேயான போட்டி ஜெய்பூரில் நேற்று நடைபெற்றது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ரன்களில் வெற்றி பெற்றது. ஜோஸ் பட்லர் 43 பந்துகளில் 69 ரன்கள் அதில் 2 சிக்ஸர்கள் 10 பவுண்டரிகள் என ரன் மழையை பொழிந்துக் கொண்டிருந்தார்.

இந்தக் கட்டத்தில்தான் ஒரு முக்கியமான திருப்புமுனை ஏற்பட்டது. ஆட்டத்தின் 13 ஆவது ஓவரை அஸ்வின் வீசினார், ஜோஸ் பட்லர் ரன்னர் திசையில் நின்றுக் கொண்டிருந்தார். அஸ்வின் 13 ஆவது ஓவரின் 5 ஆவது பந்தை வீசும் போது, பட்லர் க்ரீஸை விட்டு வெளியே நகர்ந்தார். அப்போது அஸ்வின் "மன்கட்" முறையில் ரன் அவுட் செய்தார். அதாவது ஒரு பவுலர் பந்தை வீசுவதற்கு முன்பாகவே ரன்னர் க்ரீஸை விட்டு வெளியே வந்தால் ரன் அவுட் செய்யலாம் என்ற விதி கிரிக்கெட்டில் இருக்கிறது. இப்போது அஸ்வின் செய்த இந்த ரன் அவுட்டால் பெரும் சர்ச்சை ஏற்பட்டு இருக்கிறது. அஸ்வின் செய்தது தவறு, அவர் கிரிக்கெட்டை அசிங்கப்படுத்திவிட்டார் என்ற ரீதியில் கடும் விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.

ஆனால் இந்த இரு வீரர்களின் வரலாற்றை திரும்பிப் பார்த்தால் இம்முறை மன்கட் முறையில் வீரர்களை அவுட்டாக்குவது அஸ்வினுக்கும் ஒன்றும் புதிதல்ல, இப்படி ரன்அவுட்டாவது ஜோஸ் பட்லருக்கும் புதிதல்ல. ஜோஸ் பட்லர் 5 வருஷத்துக்கு முன்பு இதேபோல இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மன்கட் ரன் அவுட்டானார். 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து - இலங்கைக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்றது. அந்த தொடரின் இரண்டாவது போட்டியில் ஜோஸ் பட்லரை இலங்கையைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் சேனநாயகே "மன்கட்" முறையில் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். 

அப்போது இது குறித்து விளக்கமளித்த ஜெயவர்தனா "முதல் எச்சரிக்கைக்கு முன்பே கூட இருமுறை அவரை எச்சரித்தோம், பட்லரும், ஜோர்டானும் ரன்னர் முனையில் பந்து வீசும் முன்பாக கிரீஸை விட்டு கொஞ்சம் அதிகமாகவே முன்னேறுகின்றனர் என்று கூறினோம். மீண்டும் மீண்டும் அவர்கள் இதனைச் செய்யவே நாங்கள் ரன் அவுட் செய்ய முடிவெடுத்தோம் வேறு வழியில்லை. எதிரணியினர் விதிமுறைகளை மீறும்போது நாங்கள் இப்படிச் செய்ய நேரிடுகிறது. இது துரதிர்ஷ்டவசமானதே என தெரிவித்தார்".

இதேபோல 7 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒருநாள் போட்டியில்
 லஹிரு திரிமணாவை மன்கட் முறையில் அஸ்வின் ரன் அவுட் செய்தார். ஆனால் நடுவர்கள் உடனடியாக அணியின் மூத்த வீரர்களான சேவாக்கையும், சச்சினையும் அழைத்து கருத்து கேட்டனர். அவர்கள் இருவரும் அவுட் கொடுக்க வேண்டாம் ஆட்டம் தொடரட்டும் என தெரிவித்தனர். இதனையடுத்து போட்டி தொடர்ந்து நடைபெற்றது. கிரிக்கெட்டின் கவுரவம் இதுபோன்ற அல்பமான அவுட்டகளால் கெட்டுப்போகக் கூடாது என்ற காரணத்தை மூத்த வீரர்கள் உணர்ந்திருந்தனர். அப்போது சச்சின், சேவாக் இருவரையும் ஊடகங்கள் கொண்டாடி தீர்த்தனர்.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com