துபாயில் நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் மன்கட் முறையில் அவுட் செய்யாமல் பெங்களூரு பேட்ஸ்மேன் ஆரோன் ஃபின்சை எச்சரித்தார் டெல்லியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்.
முதலில் பேட் செய்த டெல்லி நான்கு விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை குவித்தது. அந்த ஸ்கோரை பெங்களூரு அணி விரட்டியது. ஒப்பனர்களாக தேவ்தத் படிக்கலும், ஆரோன் ஃபின்சும் களம் இறங்கினர்.
ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை அஸ்வின் வீசிய போது நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் நின்று கொண்டிருந்த ஃபின்ச் பந்து வீசுவதற்கு முன்பே கிரீஸை விட்டு நகர்ந்திருந்தார்.
அதை கவனித்த அஸ்வின் பந்து வீசாமல் ‘மன்கட் முறையில் அவுட் செய்து விடுவேன்’ என ஃபின்சை எச்சரித்தார்.
கடந்த 2019 சீஸனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நான்-ஸ்ட்ரைக்கராக இருந்த ராஜஸ்தான் பேட்ஸ்மேன் பட்லரை அஸ்வின் ‘மன்கட்’ முறையில் பந்து வீசுவதற்கு முன்பே அவுட் செய்திருந்தார்.
அந்த அவுட் கிரிக்கெட் உலகில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
‘அது கிரிக்கெட்டின் கேம் ஸ்பிரிட்டை குலைக்கிறது. அதனால் அஸ்வினிடம் அதை செய்ய வேண்டாமென சொல்வேன்’ என டெல்லியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் நடப்பு சீஸன் ஆரம்பிப்பதற்கு முன்னர் சொல்லியிருந்தார்.