WUSHU... இந்த விளையாட்டு அவ்வளவு எளிதானதல்ல. வெற்றி வேட்கையை உடலின் ஒவ்வொரு பகுதிகளுக்கும் மின்சாரம் போல் கடத்தும் தற்காப்புக்கலை. குத்துச்சண்டை, கிக்பாக்சிங், மல்யுத்தம் ஆகிய விளையாட்டுக்களின் கூட்டுக்கலவை. இதில் சண்டா (SANDA) எனும் பிரிவில் திறனும் தேர்ச்சியும் பெற்று பதக்கங்களை குவிப்பவர் தான் ரோஷிபினா தேவி நவோரம். 22 வயதான ரோஷிபினா தேவிக்கு மணிப்பூர் மாநிலத்தில் பிஷ்ணுபூர் கிராமம்தான் அவரது சொந்த ஊர்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வெல்வது என்பது இவருக்கு புதிதல்ல. கடந்த முறை இந்தோனிஷிய மண்ணில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்த இவருக்கு சீன மண்ணில் இப்போது சவால்களும், சங்கடங்களும் ஏராளமாக இருந்தன. முக்கியமாக பற்றியெறியும் சாதிய வன்முறையில் இவரது விவசாய குடும்பமும் பாதிக்கப்பட்டு இருந்தது. கஷ்டநஷ்டங்களை கடந்து ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு சென்றார். சென்றாலும் சொந்த மாநிலத்தில் நிகழ்ந்த பல துயரங்கள் அவருக்கு மன நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டுதான் இருந்தது.
இவரது சக வீரர் - வீராங்கனைகளான நியாமன் வாங்சு, ஒனிலு டேகு, மெபுங் லங்கு ஆகிய அருணாச்சல் வீரர்களுக்கு விசா அனுமதி மறுத்து வீண் வம்பு செய்தனர் சீன அதிகாரிகள். இதில், ஒனிலு டேகு, ரோஷிபினா தேவியின் ஸபரிங் பார்ட்னர். அதாவது, பயிற்சியில் எதிர்முனையில் களமாடும் சக வீரர். சக வீரர் - வீராங்கனைகளுக்கு சேர்ந்த அநீதிக்கு மத்தியில் களமாடச் சென்றார் இந்த மணிப்பூர் தேவதை. கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றிருந்த நிலையில், இப்போது தங்கத்தை குறிவைத்தார். இறுதிப் போட்டியில் நடுவர்களின் முடிவுகள் அவ்வளவு துல்லியமானதாக இருக்கவில்லை. முடிவில் தங்கத்தை போராடி தவறவிட்டாலும், வெள்ளிப் பதக்கத்தை வென்று தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
மணிப்பூரில் நிலவும் அசாதரண சூழல், அவரது பதக்க ஓட்டத்திற்கு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக கடந்த மே மாதம் குடும்பத்தை பிரிந்திருக்கிறார் ரோஷிபினா தேவி. பயிற்சி காலத்தில் அவரது குடும்பத்தினருடன் பேசக் கூட அனுமதி மறுத்து கட்டுக்கோப்புடன் பயிற்சியெடுக்க வைத்துள்ளனர் பயிற்சியாளர்கள். இன்று, தமது பதக்கத்தை அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த சக வீரர் - வீராங்கனைகளுக்கு சமர்பித்திருக்கிறார் ரோஷிபினா தேவி. பதக்கத்தை பெற்று இறங்கிய அவர், சாதிய வெறியில் எரியும் மாநிலத்தை நினைத்து நா நடுங்க ‘எப்போது வேண்டுமானாலும் எதுவேண்டாலும் நடக்கலாம்’ என பேசியிருக்கிறார். வெற்றி தேவதையை நோக்கி இந்த தேசம் ‘காலம் மாறும்’ என்று சொல்லட்டும்.!