மான்செஸ்டர் யுனைடெட் - லிவர்பூல் இடையிலான போட்டியின் போது ரசிகர்கள் அனைவரும் ஆட்டத்தின் “7”வது நிமிடத்தில் மகனை இழந்த ரொனால்டோவுக்காக “நீங்கள் ஒருபோதும் தனியாக நடக்க மாட்டீர்கள்” என்ற பாடலை பாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
கால்பந்து ஜாம்பவான் போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ளன. அவரது காதலி ஜார்ஜினாவுக்கு அண்மையில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இதில் ஆண் குழந்தை உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக ரொனால்டோ தமது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக தெரிவித்தார்.
பெற்றோராக தான் மிகுந்த வேதனையில் இருப்பதாகவும், எனினும் நலமாக உள்ள பெண் குழந்தை தற்போது ஆறுதல் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனால் அவர் நேற்று நடைபெற்ற மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் லிவர்பூல் இடையிலான பிரீமியர் லீக் போட்டியில் பங்கேற்கவில்லை. ஆனால் ஒட்டுமொத்த மைதானமும் ரொனால்டோவுக்கு ஆறுதலாக பாடலைப் பாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர் ரொனால்டோவின் ஜெர்சி எண் “7”. இந்த எண்ணுடன் இணைத்து ரொனால்டோ பலமுறை பேசப்பட்டிருக்கிறார். கால்பந்தை பொறுத்தவரை இந்த “7” ரொனால்டோவின் ட்ரேட்மார்க் ஆக இருக்கிறது. இதனால் நேற்று மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் லிவர்பூல் அணிகள் இடையே போட்டி துவங்கிய 7வது நிமிடத்தில் மைதானத்தில் இருந்த இரு அணிகளின் ரசிகர்களும் எழுந்து நின்றனர். “Viva Ronaldo” (ரொனால்டோ வாழ்க) என்று மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்கள் பாடத் துவங்கினர்.
அவர்களுடன் லிவர்பூல் ரசிகர்களும் சேர்ந்து, “நீங்கள் ஒருபோதும் தனியாக நடக்க மாட்டீர்கள்” (You will never walk alone) என்ற பாடலை அனைவரும் ஒருசேர பாடத் துவங்கினர். அரங்கம் அதிர கைதட்டல்களுடன் ரசிகர்கள் பாடலை பாடினர். கிட்டத்தட்ட 66 வினாடிகள் பாடலை ரசிகர்கள் பாடினர். அவரது எதிரணியான லிவர்பூல் மேலாளர் ஜூர்கன் க்ளோப், “கால்பந்து இப்படித்தான் இருக்க வேண்டும். நாங்கள் அவருக்குப் பின்னால் இருக்கிறோம். நாங்கள் அனைவரும் அவருடன் இருக்கிறோம். அவரும் அவரது குடும்பத்தினரும் ஒன்றாக வலுவாக இருக்க வேண்டும் என்று நாங்கள் வாழ்த்துகிறோம்.” என்று இந்த பாடல் பாடப்படும்போது கமெண்டரியில் தெரிவித்தார்.