ஒலிம்பியாட் போட்டித் தொடரில் கார்ல்சன் தன் முதல் போட்டியில் கொலம்பிய வீரரை எதிர்கொள்ள இருந்தார். இந்தப் போட்டிக்காக அவர், தாம் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து போட்டி நடக்கும் இடத்திற்கு போக்குவரத்து பாதிப்பால் வர தாமதம் ஆகும் என்பதால் சைக்கிளில் வர கார்ல்சன் முடிவெடுத்துள்ளார்.
இதையடுத்து சைக்கிளில் சென்ற அவர், போட்டி தொடங்க சில நிமிடங்களே இருந்த நிலையில் போட்டி வளாகத்துக்குள் நுழைந்தார். ஆனால், அவருக்கு அங்கிருந்து ஆட்டக்களத்துக்குச் செல்வது சாத்தியமானதாக இருக்கவில்லை. அப்போது களத்தில் இருந்த புகைப்படக்காரரான மரியா எமிலியானோவா அவருக்கு உதவினார்.
அந்த வளாகத்தில் இருந்து ஆட்டம் நடக்கும் களத்துக்குச் செல்வதற்கான குறுக்கு வழியை அவர், கார்ல்சனுக்குக் காட்டினார். இதனால் களத்துக்கு 10 நிமிடங்கள் மட்டுமே தாமதமாகச் சென்று சேர்ந்த கார்ல்சன், தகுதி நீக்கம் செய்யப்படுவதில் இருந்து நூலிழையில் தப்பினார். ஆட்ட விதிகளின்படி, போட்டி களத்துக்கு ஆட்டம் தொடங்க 15 நிமிடத்திற்குள் வர வேண்டும். இதற்கிடையே இந்த போட்டியில் கார்ல்சன் 40 நகர்வுகளுடன் கொலம்பிய வீரரை தோற்கடித்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேக்னஸ் கார்ல்சன், “இது கொஞ்சம் குழப்பமாக இருந்தது. நான் மற்ற அணியிடமிருந்து இருந்து வேறு ஹோட்டலில் இருக்கிறேன். இதனால், போட்டி நடைபெறும் இடத்துக்குச் செல்வதில் தாமதமாகும் என்பதால் சைக்கிளில் சென்றேன். அப்போதுதான் போட்டோகிராபர் எனக்கு உதவினார்” எனத் தெரிவித்துள்ளார்.
அவருக்கு உதவி செய்த புகைப்படக்காரர் மரியா எமிலியானோவா, “போட்டிக் களத்துக்கு வெளியில் மழை பெய்தது. அதைப் புகைப்படம் எடுப்பதற்காக அங்கு காத்திருந்தேன். அப்போதுதான் கார்ல்சன் அங்கு வந்து சேர்ந்தார். அவரிடம் (அங்கீகாரம்) பேட்ஜ் இல்லை. அவருடைய அட்டையை, நார்வே அணியின் கேப்டனிடம் (ஒடின் பிளிக்ரா வே) கொடுத்துள்ளதாகக் கூறினார். மேலும், அவர் ‘நான் இந்தப் போட்டியில் விளையாடாமலேயே தோற்றுவிட்டேன்’ என்றவர், ‘இன்னும் நான்கு நிமிடங்கள் இருக்கிறது’ என்றார். அதன்பிறகே, அவருக்கு நான் குறுக்கு வழியைக் காண்பித்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பாதாளச் சாக்கடையில் மூழ்கிய கார்... வெள்ளத்தில் இருவர் உயிரிழப்பு