'ஓய்வு முடிவை முன்னதாக அறிவித்ததற்காக வருத்தப்படுகிறேன்' என்று கூறியுள்ளார் சானியா மிர்சா.
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா - ராஜீவ் ராம் ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஜெய்மி போர்லிஸ் - ஜேசன் குப்லர் ஜோடியிடம் போராடி தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறியது. இந்த வருடத்துடன் ஓய்வு பெற முடிவெடுத்துள்ள சானியா மிர்சா, ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கு இத்துடன் பிரியாவிடை அளித்துள்ளார்.
இதுகுறித்து சானியா கூறுகையில், ''சமீபத்தில் இந்த சீசனுடன் ஓய்வு பெற இருப்பதாக அறிவித்து இருந்தேன். இதுபற்றியே தொடர்ந்து கேட்கின்றனர். ஒய்வு முடிவை முன்னதாக அறிவித்ததற்காக வருத்தப்படுகிறேன். என்னைப் பொறுத்தவரையில் இந்த ஆண்டு முழுவதும் போட்டிகளில் விளையாடுவேன். ஆண்டின் இறுதியில் என்ன நடக்கப் போகிறது என்பது குறித்து இப்போது யோசிக்க விரும்பவில்லை. வெற்றி அல்லது தோல்வி என எதுவாக இருந்தாலும் 100 சதவீத திறமை வெளிப்படுத்துகிறேன். சில நேரங்களில் வெற்றி கிடைக்கும், தவிர ஏமாற்றமும் வரும். மற்றபடி நான் விளையாடும் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற விரும்புகிறேன்'' என்றார்.
2003 ஆம் ஆண்டு முதல் இந்தியாவுக்காக டென்னிஸ் களத்தில் பல்வேறு வெற்றிகளை குவித்துள்ள 35 வயதான சானியா மிர்சா, இதுவரை 6 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். டென்னிஸ் அரங்கில் இரட்டையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையாகவும் வலம் வந்த சானியா, பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.