துபாயில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபத் அணியும் அண்மையில் மோதின.
வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற அழுத்தத்தோடு சென்னை விளையாடிது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த சென்னை ஆறு விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களை குவித்தது. அதனையடுத்து விளையாடிய ஹைதராபாத் அணி விக்கெட்டை சீரிய இடைவெளியில் இழந்து வந்தது.
12 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையிலிருந்து ஹைதராபாத். 19வது ஓவரை ஷர்துல் தாக்கூர் வீசியிருந்தார். ரஷீத் கான் ஸ்ட்ரைக்கில் இருந்தார். முதல் பந்தை ஃபுள் டாஸாக அவுட்சைட் ஆப் திசையில் வீசினார் தாக்கூர்.
தொடர்ந்து இரண்டாவது பந்தை WIDE யாக்கராக வீச முயன்று அதில் தோல்வி கண்டார். அந்த பந்து WIDE என அறிவிக்கப்பட்டது. மீண்டும் அதே போல தாக்கூர் பந்து வீசினார்.
இதுவும் கிட்டத்தட்ட WIDE லைனுக்கு வெளியே சென்றது போல இருந்தது. அதே நேரத்தில் அது ரஷீத் கானின் பேட்டுக்கு கீழே சென்றது போலவும் இருந்தது. அதற்கு WIDE என சிக்னல் கொடுப்பதற்காக முயன்றார் அம்பயர் பால் ரீஃபெல். அதற்குள் கூல் கேப்டனான தோனி சினம் கொண்ட சிங்கமாக அம்பயரை ஆக்ரோஷமாக பார்த்தார். அந்த பார்வை அது WIDE இல்லை என்ற தொனியில் இருந்தது.
அதனால் அம்பயரும் சில நொடிகள் யோசித்து அது WIDE இல்லை என தனது முடிவை மாற்றிக் கொண்டார். அதனை டக் அவுட்டில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்த ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் அம்பயரின் முடிவினால் அப்செட்டானார்.
இந்நிலையில் அது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் வார்னர்…
“அன்றைய ஆட்டத்தில் அம்பயர் அந்த பந்தை WIDE என சொல்லியிருந்தால் தோனி விரக்தி அடைந்திருப்பார். ஆனால் அது WIDE டெலிவரி தான். இருப்பினும் தோனியின் ஆக்ரோஷமான உடல் மொழியை கண்டு அம்பயர் தனது முடிவை மாற்றிக் கொண்டிருக்கலாம்.
அது தோனியினால் தான் நடந்தது என்று சொல்லவில்லை. இருந்தாலும் அன்று அம்பயரின் கண் பார்வைக்கு நேர் எதிராக விக்கெட் கீப்பிங் பணியை தோனி கவனித்து கொண்டிருந்தார். அதனால் தோனி விரக்தி அடைவதை பார்த்து அம்பயர் முடிவை மாற்றியிருக்கலாம்.
களத்தில் உள்ள கேப்டன்கள் எல்லோரும் இது போல சில நேரங்களில் உணர்ச்சி வசப்படுவது உண்டு. இருப்பினும் முடிவில் அம்பயர்கள் அவர்களது முடிவை சரியாக எடுக்க வேண்டும். அந்த முடிவு எப்படி இருந்தாலும் அதற்கு வீரர்கள் மதிப்பு கொடுக்க வேண்டும். மற்றபடி இதில் விவாதிக்க எதுவும் இல்லை” என சொல்லியுள்ளார்.