ஈகுவடார் அணி உடனான லீக் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் விளையாட அர்ஜெண்டினா அணி தகுதி பெற்றுள்ளது.
2018 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. பெரு அணி உடனான போட்டி டிராவில் முடிந்ததால், அர்ஜெண்டினா உலகக்கோப்பைக்கு தகுதி பெறுவது கேள்விக்குறியானது. அர்ஜெண்டினா அணி இல்லாத, மெஸ்ஸி இல்லாத உலகக்கோப்பையை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்தனர். மிகவும் இக்கட்டான நிலையில் ஈகுவடார் அணியுடன் தனது கடைசி லீக் போட்டியில் அர்ஜெண்டினா விளையாடியது.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் ஈகுவடார் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா வீழ்த்தியது. மெஸ்ஸி ஹாட்ரிக் கோல்கள் அடித்து அந்த அணியின் வெற்றிக்கு உதவினார். இந்த வெற்றியால், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பையில் 3-வது அணியாக தகுதி பெற்றுள்ளது அர்ஜெண்டினா அணி. ஏற்கனவே பிரேசில், உருகுவே அணிகள் தகுதி பெற்று இருந்தன. அதேபோல் நேற்று கொலம்பியா அணியும் நான்காவதாக தகுதி பெற்றுள்ளது. அர்ஜெண்டினா அணி இரண்டு முறை உலகக்கோப்பை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.