உலகக் கோப்பை வெற்றியை முன்னிட்டு இன்ஸ்டாகிராமில் மெஸ்ஸி வெளியிட்ட பதிவு ஒன்று இதுவரை அதிகம் லைக் செய்யப்பட்ட புகைப்படமாக மாறியுள்ளது.
36 ஆண்டுகளுக்கு பின் கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜென்டினா வென்றுள்ளது உலகளவில் பேசுபொருளாக இருந்துவருகிறது. 35 வயதிலும் இறுதிப் போட்டியில் லயோனல் மெஸ்ஸி முன்நின்று செய்த மேஜிக் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. சாம்பியன் பட்டத்தை வென்றதும் இன்ஸ்டாகிராமில் மெஸ்ஸி சக வீரர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட பதிவு சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்தது. தற்போது அதுவே இன்ஸ்டாகிராமில் இதுவரை உலகில் அதிகம் லைக் செய்யப்பட்ட பதிவாக மாறியுள்ளது. இது மொத்தமாக 62 மில்லியன் (6.2 கோடி) லைக்குகள் பெற்றுள்ளது. 1.7 மில்லியன் (17 லட்சம்) பேர் கமெண்ட் செய்துள்ளனர். இது இச்செய்தியை அடிக்கும்போது வரையிலான நிலவரம்தான்.
முன்னதாக, கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரியில் பதிவிடப்பட்ட ஒரு சாதாரண முட்டையின் புகைப்படம் 56.7 மில்லியன் (5.67 கோடி) லைக்குகள் உடன் இன்ஸ்டாகிராமில் அதிகம் லைக் செய்யப்பட்ட புகைப்படத்தின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது.
தற்போது இந்த சாதனையை மெஸ்ஸியின் பதிவு உடைத்திருக்கிறது. கால்பந்து உலகக்கோப்பையை வென்றபிறகு மெஸ்ஸி, தனது ரசிகர்களுக்கு உணர்ச்சிப்பூர்வமான குறிப்பு ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அதில் “எத்தனையோ முறை கனவு கண்டேன், மிகவும் ஆசைப்பட்டேன், இன்னும் என்னால் நம்ப முடியவில்லை...... என் குடும்பத்தாருக்கும், என்னை ஆதரித்த அனைவருக்கும் மற்றும் எங்களை நம்பிய அனைவருக்கும் மிக்க நன்றி. அர்ஜென்டினாவில் மக்களாகிய நாம் ஒன்றாகப் போராடி ஒன்றுபட்டால், நாம் நினைத்ததைச் சாதிக்க முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளோம். தனித்துவத்துக்கும் மேலான இந்தக் குழுவுக்குத்தான் கோப்பைக்கான தகுதி இருக்கிறது. எல்லா அர்ஜென்டின மக்களுக்கும் ஒரே கனவுக்காக இருந்த இதற்காக போராடும் அனைவரின் பலமே... இந்த வெற்றி!!! விரைவில் உங்களை சந்திக்கிறோம்…'' என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் மெஸ்ஸி.
மெஸ்ஸியின் இந்த போஸ்ட், பதிவிட்ட ஓரிரு தினங்களிலேயே கிட்டத்தட்ட 62 மில்லியன் (6.2 கோடி) பார்வையாளர்களிடம் லைக் பெற்று, சாதனைகளை செய்துள்ளது. இப்போது பலரும் பழைய போஸ்ட்டுக்கு போய், மெஸ்ஸியின் பதிவை காணுங்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்!
தவற விடாதீர்: `இதலாம் இந்தியாலதான் சாத்தியம்...’ மெஸ்சி, எம்பாப்வே ஜெர்சியுடன் திருமணம் செய்த இணையர்கள்!