2011 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இன்னொரு முறை டாஸ் போடச் சொல்லிக் குழப்பத்தை முடித்து வைத்தார் தோனி என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குமார சங்கக்காரா தெரிவித்துள்ளார்.
இந்தியச் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வினுடன் இன்ஸ்டாகிராமில் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் சங்கக்காரா. அப்போது "2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அரங்கம் முழுவதும் நிறைந்திருந்தது. இதுபோல இலங்கையில் எப்போதும் இருக்காது. வான்கடே மைதானத்தில் விக்கெட் கீப்பரான என்னால் ஸ்லிப்பில் நிற்கும் பீல்டரிடம் கூட பேச முடியாது. அப்படியொரு கூட்டமிருக்கும். அப்படிதான் இறுதிப் போட்டியில் நான் டாஸ் போட்டேன், அப்போது நான் என்ன சொன்னேன் என்று தோனியின் காதில் விழவில்லை. நீங்கள் டெயில் என்று சொன்னீர்களா எனக் கேட்டார், நான் அதற்கு ஹெட் என்றேன்" என்றார்.
இது குறித்து மேலும் தொடர்ந்த சங்கக்காரா "இதற்கிடையில் போட்டி நடுவர் நான் டெஸ் ஜெயித்ததாக கூறினார். அதற்கு தோனி மறுப்பு தெரிவித்தார். அப்போது குழப்பமான சூழ்நிலை நிலவியது. இதனைத் தீர்க்கும்விதமாக மீண்டும் ஒருமுறை டாஸ் போடலாம் என்றார் தோனி, ஆனால் இம்முறையும் டாஸை நான் வென்றேன். அது அதிர்ஷ்டமா இல்லையா எனத் தெரியவில்லை. ஒருவேளை இந்தியா டாஸில் வெற்றி பெற்று இருந்தால் அவர்கள் முதலில் பேட்டிங் செய்திருப்பார்கள் என நினைக்கிறேன்" என்றார் அவர்.
2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டி தோல்வி குறித்துப் பேசிய சங்கக்காரா " வெற்றியையும் தோல்வியையும் ஒரே மாதிரியாகப் பாவிக்கும் மனப்பான்மையை நான் கொண்டு இருக்கிறேன். நிச்சயம் 2011 இறுதிப் போட்டி தோல்வியால் இலங்கை மக்கள் மிகவும் வருத்தப்பட்டிருப்பார்கள். 1996க்கு பின்பு உலகக் கோப்பையை எங்களால் வெல்ல முடியவில்லை. 2007, 2011 உலகக் கோப்பையைத் தவறவிட்டோம், பின்பு 2009, 2012 டி20 உலகக் கோப்பையையும் நாங்கள் மிஸ் செய்திருக்கிறோம்" என்றார்.