உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் 360 டிகிரியில் சுழன்று பந்துவீசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
இந்திய அணியின் முன்னாள் இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிஷன் சிங் பேடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் ஒரு சுழற்பந்துவீச்சாளர் மிகவும் வித்தியாசமான முறையில் பந்துவீசுகிறார். அவர் 360 டிகிரியில் சுழன்று அந்தப் பந்தை வீசினார். உடனடியாக நடுவர் அந்தப் பந்தினை செல்லாது என்று சைகை செய்கிறார்.
நடுவர் சைகை செய்த உடன் பீல்டிங் செய்த வீரர்கள் ஷாக் ஆகின்றனர். சிகே நாயுடு டிராபி தொடரில் மேற்குவங்கத்திற்கு எதிராக விளையாடிய உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சிவா சிங் என்பவர்தான் இப்படி பந்துவீசியுள்ளார். அந்த வீடியோவை பிஷன் பேடி பதிவிட்ட உடனே பலரும் மின்னல் வேகத்தில் தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
360 டிகிரியில் சுழன்று பந்துவீசியது செல்லாது என நடுவர் கூறியது சரியா? தவறா? என்று ட்விட்டரில் பலரும் விவாதமே நடத்தியுள்ளனர்.
இதுபோன்று பந்துவீச்சாளர் சுழன்று பந்துவீசுவது பேட்ஸ்மேனின் கவனத்தை திசைதிருப்பும் என சிலர் கூறியுள்ளனர். சிலர் பேட்டிங் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் அடிக்கிறார்கள் அதுபோல தான் இந்தப் பந்துவீச்சும்தான் என சிலர் கூறியுள்ளனர்.
இப்படியும் பந்துவீச முடியுமா என சிலர் அதிசயமாக கூறியுள்ளனர்.