இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான 18 வயது இளைஞரான ப்ரித்வி ஷா சதமடித்து அசத்தினார்.
முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியதால் ப்ரித்வி ஷா மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. மேலும் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் ப்ரித்வி ஷாவை முன்னாள் வீரர் விரேந்திர சேவாகுடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நாளை டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் "அதில் ப்ரித்வி ஷா அருமையான மிகவும் திறமைவாய்ந்த இளம் வீரர். அவர் இன்னும் வளர வேண்டும். தனது பேட்டிங் திறனை மேலும் மேம்படுத்த வேண்டும்."
"ப்ரித்வி ஷா வேகமாக கற்கக் கூடியவர் நெருக்கடி நேரங்களிலும் முதிர்ச்சியான மனப்பக்குவத்துடன் விளையாடக் கூடிய திறனை பெற்றவர். இப்போதைக்கு ப்ரித்வி ஷாவை யாருடனும் ஒப்பிட்டு பேச வேண்டாம். அவர் அவராகவே இருந்து, வளரட்டும். இப்போதைக்கு அவரை விட்டுவிடுங்கள்" என்றார் விராட் கோலி. மேலும் தொடர்ந்த கோலி "இப்போது அணியில் இணைந்துள்ள இளம் வீரர்கள் அனைவரும் திறமையானவர்கள்தான் அதில் எந்தச் சந்தேகமும் இல்லை."
மிகப் பெரிய போட்டிகள் ஏற்படுத்தும் நிர்பந்தங்கள் அவர்களுக்கு இல்லை. இந்த இளம் வீரர்கள் ஏற்கெனவே ஐபிஎல் போட்டிகள் மூலம் மிகப் பெரிய மைதானங்களில் லட்சக் கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் விளையாடியவர்கள் என்பதால் அவர்களுக்கு பதற்றம் என்பதே இல்லை" என பெருமிதத்தோடு கூறினார் கோலி.