பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வீரரும், கேப்டனுமான பாபர் அசாம் மீது கடந்த ஆண்டு பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். அது தொடர்பான புகாரை விசாரித்த லாகூர் நீதிமன்றம் பாபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய மத்திய புலனாய்வு முகமையை அறிவுறுத்தியுள்ளது.
பாபர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி ஏமாற்றியதாகவும், பாலியல் வன்கொடுமை செய்ததோடு தன்னை மிரட்டி வருவதாகவும் கடந்த ஆண்டு அந்த பெண் புகார் அளித்திருந்தார். அதோடு அதை நீதிமன்ற கவனத்திற்கும் அவர் கொண்டு சென்றிருந்தார். இந்த நிலையில் நீதிமன்றம் போலீசாரை விசாரிக்க சொல்லி உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் அந்த விசாரணை தொடரவில்லை.
இந்த நிலையில் மத்திய புலனாய்வு முகமையிடம் இந்த வழக்கு தொடர்பாக தனக்கு மிரட்டல்கள் வருவதாக அந்த பெண் புகார் அளித்திருந்தார். அதை விசாரித்த லாகூர் நீதிமன்றம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட முகமைக்கு அறிவுறுத்தியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த சூழலில் தங்களுக்கு நீதிமன்றம் எந்தவித சம்மனையும் அனுப்பவில்லை என பாபரின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் இது தொடர்பாக கருத்து தெரிவிக்காமல் உள்ளது.