தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்ற, முதல் ஆசிய கிரிக்கெட் அணி என்ற பெருமையை இலங்கை அணி பெற்றுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வந்தது. முதலாவது டெஸ்ட் போட்டியில், ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி, போர்ட் எலிசபெத்தில் நடந்தது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 222 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. தொடக்க ஆட்டக்காரர் மார்க்ரம் 60 ரன்னும் விக்கெட் கீப்பர், டி காக் 86 ரன்னும் எடுத்தனர். இலங்கை தரப்பில் பெர்னாண்டோ, ரஞ்சிதா தலா 3 விக்கெட்டையும் டி சில்வா 2 விக்கெட்டையும் எடுத்தனர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி, 154 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் டிக்வெல்லா மட்டும் 42 ரன் எடுத்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை. தென்னாப்பிரிக்கா தரப்பில் ரபாடா 4, ஆலிவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சால் 128 ரன்னுக்கு சுருண் டது. கேப்டன் டுபிளிசிஸ் அரை சதமும் அம்லா 32 ரன்னும் மார்க்ரம் 18 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியே றினார்கள். இலங்கை தரப்பில் லக்மல் 4 விக்கெட்டும், டி சில்வா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி, 196 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது.
197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன் எடுத்திருந்தது. ஒஷாடா பெர்னாண்டோ 17 ரன்னுடனும் குசால் மெண்டிஸ் 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 8 விக்கெட் கையில் உள்ள இலங்கை வெற்றி பெற 137 ரன்கள் தேவை என்ற நிலையில் நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியது.
பெர்ணாண்டோவும் (75) மெண் டிஸும் இறுதிவரை நின்று அணியை வெற்றி பெற வைத்தனர். இந்த வெற்றியின் மூலம், தென்னாப்பிரிக்க மண்ணில் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையை இலங்கை அணி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்க மண்ணில், ஆசிய அணி டெஸ்ட் தொடரை வெல்வது இதுவே முதல் முறை.
அடுத்து இரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி மார்ச் 3 ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடக்கிறது.