காயமடைந்துள்ள விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்-க்கு பதிலாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கே.எஸ்.பரத் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. இதனையடுத்து இரண்டாவது ஒரு நாள் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெறவுள்ளது.
மும்பையில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆஸி வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் வீசிய பவுன்சா் பந்து, ஹெல்மெட்டில் பட்டுக் காயமடைந்தார் இந்திய விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த். அப்போது ஆட்டமிழந்த பந்த், பின்பு இந்தியா பவுலிங் செய்யும்போது கீப்பிங் செய்ய வரவில்லை. இதனால் கே.எல்.ராகுல், அன்றையப் போட்டியின்போது விக்கெட் கீப்பராக செயல்பட்டார். தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை எடுத்து வரும் பந்த் இன்றையப் போட்டியில் பங்கேற்கவில்லை.
பெங்களூருவில் நடைபெறவுள்ள 3-வது ஒருநாள் ஆட்டத்திலும் ரிஷப் பந்த் விளையாடுவது சந்தேகம் என்பதால் இந்திய அணியில் புதிய விக்கெட் கீப்பராக ஆந்திராவைச் சேர்ந்த கே.எஸ்.பரத் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ராஜ்கோட்டில் இன்று நடைபெறவுள்ள ஒருநாள் ஆட்டத்தில் விளையாடும் இந்திய அணியுடன் பரத் இணைந்துகொள்வார்.
ஏற்கெனவே இருக்கும் விக்கெட் கீப்பர்களான சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் இருவரும் இந்திய ஏ அணியில் இடம்பெற்று தற்போது நியூஸிலாந்தில் உள்ளார்கள் என்பதால் கே.எஸ்.பரத்துக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளதாக தெரிகிறது.