இந்திய கேப்டன் விராட் கோலி இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை எப்படி சமாளிப்பது என்பது குறித்துதான் அதிகம் யோசிப்பார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து Playfield இதழில் கட்டுரை எழுதியுள்ள இர்பான் பதான் "மிட்சல் ஜான்சன் போன்ற வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள எப்போதும் கோலி கவலைப்பட்டதில்லை. ஆனால் அவருக்கு ஆண்டர்சன் பந்துவீச்சின் போது எப்போதும் சந்தேகம் இருக்கும், ஏனென்றால் அவர் பந்தை நன்றாக ஸ்விங் செய்யக் கூடியவர். ஸ்விங் ஆகும் பந்தை எதிர்கொள்ள உலகின் எந்தவொரு பேட்ஸ்மேனும் திணறுவார்கள். நீங்கள் இதை கோலியிடமே கேட்டுப்பார்க்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அதில் "பாட் கம்மின்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் போன்ற அதிவேக பந்துவீச்சாளர்களுக்கு எதிராக லேப் ஷாட், ரிவர்ஸ் ஸ்விப் ஆட முடியும். ஆனால், ஆண்டர்சன் போன்ற ஸ்விங் பௌலர்களுக்கு எதிராக இது சாத்தியமில்லாத ஒன்று. அதுவும் ஆஃப் திசையில் வரும் ஸ்விங் பந்துகளை அடித்து ஆட முற்பட்டால் விரைவில் பெவிலியன் திரும்பும் நிலை ஏற்படும். கோலி ஆஃப் திசையில் வரும் பந்துகளைத்தான் கவர் டிரைவ் அடிப்பார். ஆண்டர்சன் ஆஃப் திசையில் பந்தை ஸ்விங் செய்தால் கோலி விரைவில் ஆட்டமிழக்க நேரிடலாம்" என எழுதியுள்ளார் இர்பான் பதான்.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை சவுத்தாம்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதன் பின்பு இங்கிலாந்து அணியுடன் இந்தியா 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.