வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில், கேப்டன் விராத் கோலியின் சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட, டி-20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இப்போது ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி, மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது ஒரு நாள் போட்டி, போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராத் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவன் 2 ரன்களிலும், ரோஹித் சர்மா 18 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் வந்த ரிஷாப் பன்ட் 20 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் விராத் கோலியும், ஸ்ரேயஸ் ஐயரும் 4-வது விக்கெட்டுக்கு 125 ரன்கள் சேர்த்தனர். தனது 42-வது சதத்தை பூர்த்தி செய்த கோலி, 125 பந்துகளில் 120 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஸ்ரேயஸ் ஐயர் 71 ரன்கள் விளாசி வெளியேறினார். இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் சேர்த்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்தபோது, மழை குறுக்கிட்டதால், அந்த அணிக்கான இலக்கு 46 ஓவர்களில் 270 என மாற்றியமைக்கப்பட்டது. அந்த அணியின் அனுபவ வீரர் கிறிஸ் கெய்ல் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் லெவிஸ் 65 ரன்கள் விளாசினார். இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதையடுத்து அந்த அணி 42 ஓவர்களில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் 31 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தி னார். ஷமி மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 3-வது போட்டி வரும் 14 ஆம் தேதி இதே மைதானத்தில் நடைபெறுகிறது.