அடுத்தடுத்து சரிந்தது விக்கெட்: இங்கிலாந்தில் தடுமாறும் இந்திய அணி!

அடுத்தடுத்து சரிந்தது விக்கெட்: இங்கிலாந்தில் தடுமாறும் இந்திய அணி!
அடுத்தடுத்து சரிந்தது விக்கெட்: இங்கிலாந்தில் தடுமாறும் இந்திய அணி!
Published on

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து போராடி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பர்மிங்ஹாமில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்தெடுத்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 287 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் 80 ரன்னும் பேர்ஸ்டோ 70 ரன்னும் எடுத்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளும், முகமது ஷமி 2 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 274 ரன்கள் எடுத்தது. இந்திய கேப்டன் விராத் கோலி அபார சதமடித்தார். இங்கிலாந் து மண்ணில், டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த முதல் சதம் அது. அவர் 149 ரன்கள் எடுத்தார்.இங்கிலாந்து தரப்பில் சாம் குர்ரன் 4 விக்கெட்டும், ஆண்டர்சன், ரஷித், பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

13 ரன்கள் முன்னிலையுடன் 2 வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் அலஸ்டைர் குக், அஸ்வின் பந்து வீச்சில் மீண்டும் போல்டு ஆனார். முதல் இன்னிங்ஸிலும் அவர், அஸ்வின் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்திருந்தார். ஜென்னிங்ஸ் 5 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

மூன்றாவது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. ஜென்னிங்ஸ், கேப்டன் ஜோ ரூட் ஆகியோர் ஆட்டத்தை தொடர்ந்தனர். சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின், வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி ஆகியோர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 18 ரன்னை எட்டிய போது ஜென்னிங்ஸ் (8 ரன்) அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து டேவிட் மலன் வந்தார். முதல் இன்னிங்சில் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ஜோ ரூட், 14 ரன்கள் எடுத்திருந்தபோது, அஸ்வின் பந்தில், ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பின்னர் பேர்ஸ்டோ, மலனுடன் இணைந்தார். வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ‌ஷர்மா இருவருக்கும் நெருக்கடி கொடுத்தார். இஷாந்த் பந்து வீச்சில் மலான் (20 ரன்) ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அவர் வீசிய ஒரு ஓவரில் பேர்ஸ்டோ (28 ரன்) பென் ஸ்டோக்ஸ் (6 ரன்) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி  6 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்களை எடுத்து தடுமாறிக்கொண்டிருந்தது. உணவு இடைவேளைக்குப் பின், இஷாந்த், ‌ஜோஸ்பட்லர் (1 ரன்) விக்கெட்டை சாய்த்தார். 

பின்னர், ரஷித், சாம் குர்ரனுடன் சேர்ந்தார். குர்ரன் அடித்து ஆடி இங்கிலாந்து அணி கவுரமான ஸ்கோரை எட்ட வழிவகுத்தார். அவர் 65 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்த நிலையில் உமேஷ் யாதவ் பந்து வீச்சில் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முன்னதாக ரஷித் (16 ரன்) உமேஷ் யாதவ் பந்துவீச்சில் போல்டானார். ஸ்டூவர்ட் பிராட் (11 ரன்) இஷாந்த் ‌ஷர்மா பந்துவீச்சில் தவானிடம் கேட்ச் ஆனார். 

இதையடுத்து, இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜேம்ஸ் ஆண்டர்சன் ரன் எதுவும் எடுக்காமல் களத் தில் நின்றார். இந்திய அணி தரப்பில் இஷாந்த் ‌ஷர்மா 5 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. பிட்ச், வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால், இந்திய அணி வீரர்கள் தடுமாறத் தொடங்கினர். தொடக்க ஆட்டக்காரர்கள் முரளி விஜய் (6), தவான் (13) ஆகியோரின் விக்கெட்டை பிராடும், கே.எல்.ராகுல் (13) விக்கெட்டை பென் ஸ்டோக்ஸூம் வீழ்த்த திணறத் தொடங்கியது இந்திய அணி. சாம் குர்ரன் பந்துவீச்சில் ரஹானே (2 ரன்)வும் ஆண்டர்சன் பந்துவீச்சில் அஸ்வினும் (13 ரன்) வெளியேறியதும் கேப்டன் விராத் கோலியுடன் இணைந்தார் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்.

இருவரும் பொறுப்புடன் நிலைத்து நின்றும் அதே நேரம் தோதான பந்துகளை அடித்தும் ஆடினார்.  நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டை இழந்து 110 ரன்கள் எடுத்துள்ளது. விராத் கோலி 43 ரன்னும் தினேஷ் கார்த்திக் 18 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். இந்திய அணி வெற்றி பெற 84 ரன்கள் தேவை. இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது. இன்றைய போட்டி இந்திய அணிக்கு சவால் நிறைந்ததாகவே இருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com