2020 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று வடிவங்களிலும் அதிக ரன் குவித்தவர்களின் பட்டியலில் சர்வதேச அளவில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடம் பிடித்துள்ளார். முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி சர்வதேச அளவில் 7வது இடத்திலும் இந்திய அளவில் முதலிடத்திலும் இடம்பெற்று ஆச்சர்யப்படுத்தி உள்ளார்.
முதலிடத்தில் இருக்கும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 3508 ரன்கள் விளாசி உள்ளார். டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் முறையே 1281, 1083 மற்றும் 1144 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஒட்டுமொத்த சராசரி 53.15 ஆகும். 2வது இடத்தில் உள்ள ஜோ ரூட் மூன்று வடிவங்களையும் சேர்த்து 3,352 ரன்கள் குவித்துள்ளார். கடந்த ஆண்டு முதல் ஒரு ஒருநாள் போட்டியில் ஜோ ரூட் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரூட் டெஸ்டில் 3099 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 253 ரன்களும் எடுத்துள்ளார். ரூட்டின் ஒட்டுமொத்த சராசரி 56.81 ஆகும். இது பாபர் ஆசாமின் சராசரியை விட அதிகம் ஆகும்
விராட் கோலி ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. குறிப்பாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை. ஆனால் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் இந்திய அளவில் முதலிடத்திலும் சர்வதேச அளவில் 7வது இடத்திலும் அவர் நீடித்து வருகிறார். 2020 ஆம் ஆண்டு முதல் அனைத்து வடிவங்களிலும் 34.95 சராசரியுடன் 2237 ரன்களை குவித்துள்ளார் கோலி. டி20 போட்டிகளில் 663 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 702 ரன்களும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 872 ரன்களும் விளாசியுள்ளார் கோலி.
சர்வதேச அளவில் முதல் 10 இடங்களுக்குள் கோலி தவிர மேலும் இரு இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். 9வது இடத்தில் இடம்பெற்றுள்ள இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா 2157 ரன்களும், 10வது இடத்தில் இடம்பெற்றுள்ள இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 2097 ரன்களும், குவித்துள்ளனர்.
2020க்குப் பிறகு இந்தியாவுக்காக அதிக ரன் குவித்த வீரர்கள்:
(மூன்று வடிவங்களும் சேர்த்து)
இந்திய வீரர்கள் | ரன்கள் | இன்னிங்ஸ் |
விராட் கோலி | 2265 | 72 |
ரோகித் சர்மா | 2157 | 59 |
ரிஷப் பண்ட் | 2097 | 65 |
கேஎல் ராகுல் | 1979 | 51 |
விராட் கோலியை விட மற்ற வீரர்கள் குறைவான ரன்களையே எடுத்துள்ள நிலையில் அவர் மீது மட்டும் தொடர்ச்சியாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது.